ஆன்மிகம்
தேனூரில் சுந்தரவள்ளி அம்மன் வீதிஉலா நடைபெற்றதையும், சேத்தாண்டி வேடமிட்டு வந்த பக்தர்களையும் படங்களில் காணலாம்.

தேனூர் சுந்தரவள்ளி அம்மன் கோவிலில் புரட்டாசி திருவிழா

Published On 2019-10-10 07:42 GMT   |   Update On 2019-10-10 07:42 GMT
சோழவந்தான் அருகே தேனூர் சுந்தரவள்ளி அம்மன் கோவிலில் புரட்டாசி பொங்கல் திருவிழா நடைபெற்றது. இதனையொட்டி பக்தர்கள் சேத்தாண்டி வேடமிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.
சோழவந்தான் அருகே தேனூரில் உள்ள சுந்தரவள்ளி அம்மன் கோவில் வரலாற்று சிறப்பு பெற்றது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி பொங்கல் திருவிழா கிராம மக்களால் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டிற்கான புரட்டாசி பொங்கல் திருவிழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவையொட்டி பக்தர்கள் விரதம் இருந்து வந்தனர்.

இந்தநிலையில் திருவிழாவின் முதல் நாளான நேற்று முன்தினம் பக்தர்கள் பால்குடம், அக்னிசட்டி எடுத்து ஊர்வலமாக சென்று கோவிலில் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினார்கள். அப்போது அம்மன் சிறிய கோவிலில் இருந்து புறப்பட்டு பெரிய கோவிலை வந்தடையும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு 21 வகை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அன்றிரவு கோவில் முன்பாக ஏராளமானோர் பொங்கல் வைத்தும், மாவிளக்கு எடுத்தும் அம்மனை வழிபட்டனர்.



திருவிழாவின் 2-ம் நாளான நேற்று அம்மன் சிங்க வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் அம்மன் வீதிஉலா, 7 கரகாரர்கள் மற்றும் முளைப்பாரி ஊர்வலத்துடன் நடைபெற்றது.

இதில் ஏராளமான பக்தர்கள் நேர்த்திக்கடனுக்காக உடல் முழுவதும் சகதியை பூசி கொண்டு சேத்தாண்டி வேடமிட்டு வந்தனர். வீதி உலாவின்போது, வழி நெடுக அம்மனை வரவேற்று பக்தர்கள் அபிஷேகம் செய்தனர்.

இதுதவிர சமய ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக இசுலாமியர்கள் தங்களது மசூதிக்கு முன்னால் வந்த சுந்தரவள்ளி அம்மனை வரவேற்றனர். பின்னர் நள்ளிரவு அம்மன் பல்லக்கில் எழுந்தருளி பவனி வந்து, சின்ன கோவிலை வந்தடைந்தார். திருவிழாவில் இன்று(வியாழக்கிழமை) அம்மன் பூப்பல்லக்கு பவனி நடைபெறுகிறது.
Tags:    

Similar News