ஆன்மிகம்
திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில்.

திருவட்டார் பெருமாள் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்துவது எப்போது?

Published On 2019-10-09 05:58 GMT   |   Update On 2019-10-09 05:58 GMT
2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான திருவட்டார் பெருமாள் கோவிலில் கும்பாபிஷேகம் நடக்க போவது எப்போது என்று பக்தர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
108 வைணவ தலங்களில் திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலும் ஒன்று. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய புறநானூறு செய்யுள் தொகுப்பில் திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலின் சிறப்புகள் இடம் பெற்றுள்ளன. எனவே இந்த கோவில் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது என்று கூறப்படுகிறது. ஆழ்வார்களில் முதன்மையானவராக கருதப்படும் நம்மாழ்வார் மங்களசாசனம் செய்த தலங்களுள் இதுவும் ஒன்றாகும். நாகர்கோவிலில் இருந்து சுமார் 35 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இக்கோவிலின் கருவறையில் பாம்பின் மீது பள்ளி கொண்ட பெருமாளாக ஆதிகேசவர் பக்தர்களுக்கு அருள்பாலிப்பது சிறப்பம்சமாகும்.

108 திருப்பதிகளில், இந்த கோவிலில்தான் பெருமாள் சயன நிலையில் 22 அடி நீளத்தில் உள்ளார். இதனை வேறு எங்கும் காண முடியாது. 16 ஆயிரத்து எட்டு சாளக்கிராமங்களால் உருவாக்கப்பட்ட பெருமாளின் மீது கடுசர்க்கரையால் பூசப்பட்டுள்ளது. இதனால் இந்தக்கோவிலில் மூலவருக்கு அபிஷேகம் கிடையாது. உற்சவருக்கு மட்டுமே அபிஷேகங்கள் நடைபெறுகின்றன.

இவ்வளவு சிறப்புகளை கொண்ட இந்த கோவில், குமரி மாவட்டம் தென்திருவிதாங்கூர் சமஸ்தான ஆட்சி அதிகாரத்தின்கீழ் இருந்த காலத்திலும் சரி, அதற்கு முந்தைய குறுநில மன்னர்கள் (ஆய் மன்னர்கள் உள்ளிட்டோரின்) ஆட்சிக்காலத்திலும் சரி மன்னர்களும், அவர்களது குடும்பத்தினரும் வழிபாடு செய்யும் கோவிலாகவும், ஆதிகேசவர் அவர்களது இஷ்டதெய்வமாகவும் இருந்துள்ளது.

பொதுவாகவே பெருமாளை பக்தர்கள் பணக்கார தெய்வம் என்று கூறுவதுண்டு. அதைப்போல திருவட்டார் ஆதிகேசவ பெருமாள், மன்னர்களின் தெய்வமாக இருந்ததாலோ என்னவோ? பெருமாளுக்கு அணிகலன்களாக கிலோ கணக்கில் நகைகள் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே இருந்துள்ளது.

தென்திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் தலைநகராக குமரி மாவட்டத்தில் உள்ள பத்மநாபபுரம் இருந்துள்ளது. அதன்பிறகு கேரள மாநிலம் திருவனந்தபுரம், தென்திருவிதாங்கூர் சமஸ்தான தலைநகரமாக மாறி உள்ளது. கேரள மாநிலத்தில் உள்ள பத்மநாபசாமி கோவிலுக்கு மூல கோவிலாக திருவட்டார் ஆதிகேசவபெருமாள் கோவிலை கூறுகின்றனர். அதற்கேற்ப திருவட்டார் கோவில் கருவறையில் உள்ள ஆதிகேசவரை, திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாபர் முகத்தோடு முகம் பார்க்கும் வகையில் இரு கோவில்களும் அமைந்துள்ளன. இந்த 2 கோவில்களிலும் இன்றைக்கும் ஒரே காலகட்டத்தில்தான் திருவிழாக்கள் நடைபெறுவது உண்டு. இதுதவிர பூஜை, வழிபாடு முறைகளும் ஒன்றுபோல் உள்ளன.

1956-ம் ஆண்டுக்கு பிறகு தென்திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்து குமரி மாவட்டம் தாய் தமிழகத்துடன் இணைந்தது. ஆனாலும் திருவட்டார் கோவிலில் நடைபெறும் முக்கிய நிகழ்ச்சிகளுக்கு மன்னர்களின் பிரதிநிதிகளாக அவர்களது குடும்பத்தை சேர்ந்தவர்கள் வந்து பங்கேற்று, சுவாமிக்கு முன்பாக வாள் ஏந்திச் செல்லும் சடங்குகள் இன்றும் நடைமுறையில் இருந்து வருகிறது.

இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த கோவிலின் இன்றைய நிலையை பார்த்து பக்தர்கள் கண்ணீர் வடிக்கும் வகையில்தான் இருந்து வருகிறது. பூஜைகள், அபிஷேகங்கள் போன்றவை இந்த கோவிலின் ஆகம விதிகளின்படி நடைபெறுவதில்லை என்பதும், கடமைக்காக பூஜைகள் நடத்தப்படுகிறது என்ற குற்றச்சாட்டும் பிரதானமாக இருந்து வருகிறது.

குறிப்பிட்ட காலங்களில் கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்பது ஐதீகம். ஆனால் திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்தி 400 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது என்று கூறப்படுகிறது. மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த பல்வேறு காலகட்டங்களில் முயற்சிகள் மேற்கொண்டும் பயன் அளிக்கவில்லை. ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்தபோது இந்த கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த திருப்பணிக்குழு அமைக்கப்பட்டது. அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளாததால் அந்த குழுவும் கலைக்கப்பட்டதாக தெரிகிறது.

இந்த நிலையில் இந்துசமய அறநிலையத்துறை சார்பில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. கொடி மரம் அமைப்பதற்காக கேரள வனப்பகுதியில் இருந்து 75 அடி உயர தேக்குமரம் வெட்டிக் கொண்டுவரப்பட்டு, கோவில் வளாகத்தில் எண்ணெய் தொட்டியில் ஊற வைக்கப்பட்டுள்ளது. 6 மாதங்கள் மட்டுமே ஊற வைக்க வேண்டிய கொடிமரம், சுமார் 1 ஆண்டுக்கு மேல் ஆகியும் ஊறிக்கொண்டிருக்கிறது.

இந்துசமய அறநிலையத்துறையின் சார்பில் நியமிக்கப்படும் ஸ்ரீகாரியம் என்று சொல்லக்கூடிய கோவில் மேலாளர் பல மாதங்களாக நியமிக்கப்படவில்லை. கோவில் மேலாளர் இல்லாததால் குமாரகோவில் முருகன் கோவிலின் மேலாளர்தான் இந்த கோவிலின் பொறுப்பையும் கூடுதலாக கவனித்து வருகிறார். கும்பாபிஷேகத்துக்கு தேவையான பணிகளை மேற்கொள்ள நன்கொடையாளர்கள் பலர் முன்வந்தும்கூட அதனை பெற்று பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.

கோவிலின் மூலவர் சிலையில் இருந்து திருடப்பட்ட நகைகளில் 4½ கிலோ நகைகளை போலீசார் மீட்டு இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர். விழா நாட்களில் அந்த நகைகள் சாமிக்கு அணிவிக்கப்படுவது இல்லை என்கிறார்கள் பக்தர்கள். நகை கொள்ளை வழக்கு முடிவடைந்த நிலையில் அந்த நகைகளை மீட்டு சாமிக்கு அணிவிக்க வேண்டும் என்பது பக்தர்களின் கோரிக்கையாக உள்ளது. மேலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த கோவில் திருப்பணிகளில் முழு கவனம் செலுத்தி கும்பாபிஷேகம் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதும், குமரி மாவட்ட இந்து சமய அறநிலை யத்துறைக்கு 490 கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களை நிர்வகிக்கவும், முறைகேடுகளை தடுக்கவும், கோவில் பணிகள்சரியாக நடப்பதற்கும் ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரியை தனியாக நியமிக்க வேண்டும் என்பதும் பக்தர்களின் கோரிக்கையாக உள்ளது.



திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் சேவா அறக்கட்டளை அலுவலகம் கோவிலின் வெளிப்புறத்தில் அமைந்துள்ளது. இந்த சேவா அறக்கட்டளை தலைவராக அனந்தகிருஷ்ணன் இருந்து வருகிறார். கோவிலின் கும்பாபிஷேக திருப்பணிகள் குறித்து அவர் கூறியதாவது:-

எங்கள் சேவா அறக்கட்டளையானது கோவில் வளர்ச்சிக்கும், பக்தர்களுக்கு தேவையான வசதிகளையும் செய்து கொடுத்து வருகிறது. அதிகாரிகளின் மெத்தனப்போக்கும், திருப்பணிகளில் தீவிரம் காட்டாததும்தான் கும்பாபிஷேகம் நடத்தப்படாததற்கு காரணம். திருப்பணிகளை மேற்கொள்ள நன்கொடையாளர்கள் தயாராக உள்ளனர். அதனை வாங்கி பயன்படுத்த அதிகாரிகள் முன்வருவது இல்லை. கொடிமரம்கூட அரேகிருஷ்ணா இயக்க தலைவர் மதுபண்டிட்ஜி என்பவர் கொடுத்த நன்கொடை மூலம் பெறப்பட்டது.

இதுவரை நடந்துள்ள திருப்பணிகளும் அரைகுறையாகத்தான் நடந்துள்ளது. கோவிலில் ஆசார முறைகள் ஒழுங்காக கடைபிடிக்கப்படுவதில்லை. எனவே மீண்டும் குடைநம்பிகளை வைத்து கோவிலில் பூஜைகளை செய்ய வேண்டும். ஆகம விதிமுறைகளுக்கு எதிரான செயல்கள் நடைபெறுவதால்தான் கோவிலுக்கு கும்பாபிஷேகம் தடைபட்டுக்கொண்டே போகிறது.

கொள்ளையர்களிடம் இருந்து மீட்கப்பட்ட நகைகளை சாமிக்கு அணிவிக்க வேண்டும். பழைய கொடிமரத்தை அகற்றியபோது கொடிமரத்தின் கீழ் இருந்ததாக கூறப்படும் தங்கம் எங்கு இருக்கிறது? என்ற விவரத்தையும் தெரிவிக்க வேண்டும். மன்னர்கள் கொடுத்த 14½ கிலோ தங்க நகைகளையும், வைரம் மற்றும் வைடூரியத்தால் ஆன கிரீடத்தையும் ஆதிகேசவருக்கு சாத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். முன்பு போல ஆதிகேசவர் பக்தர்களுக்கு அருள்பாலிக்க வேண்டும் என்றால் நகைகள் அனைத்தையும் அவருடைய உடலில் அணிவித்து, முறையாக பூஜைகள் செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்தி 400 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. தற்போது கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த திருப்பணிகள் நடந்து வருகிறது. கோவிலில் மூலிகை சாற்றால் ஆன ஓவியம் வரையவும், உதயமாத்தாண்டன் மண்டபம் சீரமைக்கவும் தமிழக அரசு ரூ.97 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளது. இதில் பெரும்பாலான தொகை மூலிகை ஓவியத்துக்கு செலவு செய்யப்பட இருக்கிறது.

கோவிலின் உள்பிரகாரம், சுற்றுப்பிரகாரம், வெளிபிரகாரம், மூலஸ்தானம் போன்ற பகுதிகளில் இந்த ஓவியங்கள் பழமை மாறாமல் இடம்பெற உள்ளன. இதற்கான ஒப்பந்தத்தை குமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் எடுத்துள்ளார். அவர் கேரளாவில் உள்ள கோவில்களில் இதுபோன்ற மூலிகை ஓவியங்கள் வரையக்கூடியவர்களைக் கொண்டு மேற்கொள்ள உள்ளார். இந்த பணி முடிய சுமார் 10 மாதங்களுக்கு மேலாகி விடும்.

குடநம்பிகள் தங்கக்கூடிய நம்பி மடம், திருவம்பாடி கிருஷ்ணன்சன்னதி, உள்ளிட்டஉள்பிரகார சன்னதிகளின் சீரமைப்பு பணிகள் முடிவடைந்துள்ளன. குலசேகரபெருமாள் கோவில் உள்ளிட்ட சில இடங்களில் சீரமைப்பு பணிகளும் நடந்து வருகின்றன. நன்கொடையாளர்கள் மூலம் ரூ.30 லட்சம் செலவில் முழுக்க, முழுக்க மரங்களால் ஆன விளக்களிமாடம் கோவிலைச் சுற்றிலும் அமைக்கப்பட இருக்கிறது. கோவில் கொடிமரம் அரேகிருஷ்ணா இயக்கத்தின்மூலம் பெறப்பட்டது.

கடந்த 20 ஆண்டுளாக என்ன நடைமுறை இருந்து வருகிறதோ, அதே நடைமுறையில்தான் பூஜைகள் நடக்கிறது. குடைநம்பிகள் நியமிக்கப்படவில்லை. தலைமை போத்தி, மேல்சாந்தி, கீழ்சாந்தி, உதவி போத்திகள் என 15-க்கும் மேற்பட்ட போத்திமார்கள் இந்த கோவிலுக்கு உண்டு. தற்போது 3 போத்திமார்கள் உள்ளனர். பணியாளர்கள் 20 பேர் உள்ளனர். அடுத்த ஆண்டு இறுதிக்குள் இந்த கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்படும். கும்பாபிஷேகத்துக்கு பிறகு கோவிலின் பழைய நடைமுறைகள் அனைத்தும் செயல்பாட்டுக்கு வந்துவிடும்.

இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.
Tags:    

Similar News