ஆன்மிகம்
பிரசன்ன வெங்கடாசலபதி கோவில் தேரோட்டம் நடைபெற்ற போது எடுத்தபடம். (உள்படம்: சிறப்பு அலங்காரத்தில் பெருமாள்).

பிரசன்ன வெங்கடாசலபதி கோவில் தேரோட்டம்

Published On 2019-10-09 05:50 GMT   |   Update On 2019-10-09 05:50 GMT
குணசீலம் பிரசன்ன வெங்கடாசலபதி கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
திருச்சி அருகே உள்ள குணசீலத்தில் பிரசன்ன வெங்கடாசலபதி பெருமாள் கோவில் உள்ளது. குணசீல மகரிஷியின் தவத்தை மெச்சிய பெருமாள், பிரசன்ன வெங்கடேசனாக காட்சியளித்த தலமாகும். இங்கு எழுந்தருளி இருக்கும் பெருமாள் சங்கு சக்கரதாரியாய் திருமார்பில் லட்சுமியை தாங்கி செங்கோல் ஏந்தி, நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார்.மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் இத்தலத்தில் 48 நாட்கள் தங்கியிருந்து வணங்கினால் தெளிவடைவார்கள் என்பது நம்பிக்கை. திருப்பதிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கு வந்து பெருமாளை தரிசித்தால் அதற்குரிய பலன்கள் கிடைக்கும் என்றும் பக்தர்களால் நம்பப்படுகிறது. இவ்வாறு பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் கடந்த மாதம் 30-ந் தேதி கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவ விழா தொடங்கியது.

அன்று முதல் காலையில் பல்லக்கிலும், இரவு 8 மணியளவில் சிம்ம வாகனம், அனுமந்த வாகனம், தங்க கருட வாகனம், சேஷ வாகனம், யானை வாகனத்தில் சாமி புறப்பாடு நடைபெற்றது. கடந்த 6-ந்தேதி திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று காலை நடைபெற்றது.

முன்னதாக காலை 5.30 மணிக்கு பெருமாள் நாச்சியாருடன் தேரில் எழுந்தருளினார். காலை 8.31 மணிக்கு மேளதாளங்கள் முழங்க திருத்தேர் வடம் பிடிக்கப்பட்டு தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ‘கோவிந்தா, கோவிந்தா' என்று கோஷங்களை முழங்கி தேரை வடம்பிடித்து இழுத்தார்கள்.

தேருக்குப்பின்னால் தங்களுடைய வேண்டுதல்களை நிறைவேற்றும் பொருட்டு ஆண்கள், பெண்கள் என்று ஏராளமான பக்தர்கள் ஈர உடையுடன் கையில் தேங்காய்களை வைத்துக்கொண்டு தேருக்குப்பின்னால் அங்கப்பிரதட்சணம் செய்தார்கள். தேர் 9.35 மணிக்கு நிலையை அடைந்தது.அதைத் தொடர்ந்து மாலை 5 மணிக்கு புண்யாக வாசனம், சிறப்பு திருமஞ்சனம், தீர்த்தவாரி நடைபெற்றது. இரவு 6.30 மணிக்கு ஏகாந்த மண்டப கும்ப தீபாராதைன நடைபெற்றது.

விழாவை முன்னிட்டு பல்வேறு அமைப்புகள் சார்பாக பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று (புதன் கிழமை) ஸப்தாவரணமும், இரவு கேடயத்தில் புறப்பாடும் நடைபெறுகிறது. நாளை (வியாழக்கிழமை) இரவு புஷ்ப பல்லக்கில் சாமி புறப்பாடு நடைபெறுகிறது. தொடர்ந்து ஏகாந்த மண்டப தீபாராதைனயும் கண்ணாடி அறை சேவையும் நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் பிச்சுமணி அய்யங்கார் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர்.
Tags:    

Similar News