ஆன்மிகம்
நவராத்திரி கொலு

நவராத்திரி கொலு வைபவம்

Published On 2019-09-29 07:59 GMT   |   Update On 2019-09-29 07:59 GMT
நவராத்திரியை 3, 3 நாட்களாக பிரித்துக்கொள்கிறோம். முதல் 3 நாட்கள் துர்க்கை அம்மனுக்கும், இரண்டாது 3 நாட்கள் மகாலட்சுமிக்கும் கடைசி 3 நாட்கள் சரஸ்வதி அம்மனுக்கும் உகந்தது.

நவராத்திரி என்பது ஆண்டுக்கு 2 முறை வருகிறது. சில இடங்களில் 4 நவராத்திரிகள் கூட கொண்டாடுவார்கள். ஆனால் அக்டோபர் மாதத்தில் கொண்டாடப்படும் நவராத்திரியை தான் நாம் கடைபிடிக்கிறோம். இந்த நவராத்திரிக்கு சாரதா நவராத்திரி என்று பெயர். வட மாநிலங்களில் ஷ்ரதா நவராத்திரி என்று சொல்கிறார்கள். நியமப்படி பக்தியுடன் கொண்டாடப்படும் நவராத்திரி என்று இதற்கு பொருள். மார்ச் மாதத்தில் கொண்டாடப்படும் நவராத்திரிக்கு வசந்த நவராத்திரி என்று பெயர்.

ஆனால் அதிகம் பேர் கொண்டாடுவது சாரதா நவராத்திரியை தான். காளி அவதாரம் எடுத்து மகிஷாசுரனை அழித்த பராசக்தியை கொண்டாடுவதே நவராத்திரி. அறிவியல் காரணம் நவராத்திரிக்கும் உண்டு. இந்த அக்டோபர் மாதம் என்பது மழை தொடங்கும் நேரம். இந்த காலங்களில் இரவு நேரம் அதிகமாகவும் பகல் நேரம் குறைவாகவும் இருக்கும். எனவே இந்த சீதோஷ்ண நிலைக்கு நம் உடலை மாற்றும் வகையிலேயே நவராத்திரி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த 9 நாட்களுமே பூஜை செய்யப்பட்டு சுண்டல் போன்ற புரோட்டீன் அடங்கிய உணவுகள் சாப்பிடுவதால் உடல் தெம்பு பெறும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும்.

இந்த நவராத்திரியை 3, 3 நாட்களாக பிரித்துக்கொள்கிறோம். முதல் 3 நாட்கள் துர்க்கை அம்மனுக்கும், இரண்டாது 3 நாட்கள் மகாலட்சுமிக்கும் கடைசி 3 நாட்கள் சரஸ்வதி அம்மனுக்கும் உகந்தது. பத்தாம் நாள் தான் வெற்றிக்கு உகந்த விஜயதசமி கொண்டாடப்படுகிறது. மனிதன் வாழ தைரியம், செல்வம், கல்வி மூன்றும் தேவை. இந்த அர்த்தத்தை உணரும் வகையில் தான் நவராத்திரியை கொண்டாடுகிறோம்.

கொலு வைக்கும் முறை

கொலு வைப்பதை பொருத்தவரை பாரம்பரியமாக வைப்பவர்கள் தான் கொண்டாட வேண்டும் என்று இல்லை. புதிதாக கொலு வைப்பவர்களும் கொண்டாடலாம். முதலில் கொலு வைக்கும் படிகள் இருந்தால் அதை எடுத்து சுத்தப்படுத்தி மஞ்சள், குங்குமம் வைக்கவும். சுத்தமான சிவப்பு துணியை விரித்துக்கொள்ளவும். கொலு பூஜையில் கலசத்தில் இருந்துதான் பூஜையை தொடங்கவேண்டும்.

கலசத்தில் நூல் கட்டவேண்டும். ஆனால் அதற்கான ஐதீகம் தெரியாதவர்கள் நூல் கட்டுவது சிரமம். எனவே நூல் கட்டாவிட்டாலும் பரவாயில்லை. அந்த கலசத்தில் எலுமிச்சம்பழம், வெத்தலை பாக்கு, ஒரு ரூபாய் நாணயம் ஆகியவற்றை போட்டு வாய் பகுதியில் மாவிலை கட்டிக்கொள்ளவும். மாவிலை கிடைக்கவில்லை என்றால் வெற்றிலையை பயன்படுத்தலாம். தேங்காயை குடுமியுடன் மஞ்சள் குங்குமம், மாலை அணிவித்து அதில் வைக்கவேண்டும். இந்த கும்ப பூஜையை நவராத்திரி தொடங்கும் நாள் அன்று சூரிய ஓரையின்போது செய்யவேண்டும்.

பூஜை செய்த கலசத்தை கொலு ஸ்டாண்டுக்கு அருகில் வைத்துக்கொள்ளவும். கொலுப்படிகள் எப்போதுமே ஒற்றைப்படை எண்ணிக்கையில் தான் அமைக்கப்பட வேண்டும். 5, 7, 9 என்ற எண்ணிக்கையில் வைக்கவும். 9 படிகள் வைத்தால் சிறப்பு. ஒவ்வொரு படியிலும் என்னென்ன வைக்க வேண்டும் என்பதை பார்க்கலாம். கொலு வைக்கும் முறையே மனிதனுடைய வாழ்க்கைக்கு என்னென்ன தேவை என்பதை உணர்த்தும் வகையிலேயே இருக்கும். ஒன்றோடு ஒன்று சார்ந்த வகையில் தான் பொம்மைகள் இருக்கும். மண்ணால் செய்த பொம்மைகளை வைத்து வணங்கும் இடத்தில் எனது பேரருள் இருக்கும் என்று பராசக்தியே கூறி இருக்கிறார்.

படி தத்துவம்

அம்பாளே 9வது படியில் விநாயகரையும் அடுத்து அம்பாளையும் அதற்கு அடுத்து லட்சுமி, சரஸ்வதியை வைக்கவேண்டும் என்று கூறி இருக்கிறார். அதற்கு அடுத்து சிவன், விஷ்ணு, பிரம்மா என்று வரிசையாக முழு முதற் கடவுள்களை ஒன்பதாவது படியில் வைக்க வேண்டும். நாம் உயிர் வாழ அடிப்படையே விவசாயம் தான். அதை உணர்த்தக்கூடிய புல், பூண்டு, முளைப்பாரி, தானிய வகைகளை குறிக்கும் பொம்மைகளை முதல் படியில் வைக்கவேண்டும். சிலர் முந்தைய நாளே முளைக்க வைக்கப்பட்ட தானியங்களை கொத்துடன் வைப்பார்கள்.

முதல் படியில் ஓரறிவு உள்ள உயிர்களை வைத்துவிட்டோம். அடுத்த படியில் ஈருயிர் உருவங்களை வைக்கவேண்டும். கடல்வாழ் உயிரினங்களான மீன், சிப்பி, நத்தை போன்ற உருவங்களை இந்த படியிலும் அடுத்த படியான மூன்றாவது படியில் மூவுயிர் பிராணிகளான எறும்பு, ஈ, கரையான் போன்ற உருவங்களையும் வைக்கவேண்டும். நான்காம் படியில் நான்கு அறிவு ஜீவன்களான நண்டு, வண்டு போன்ற உருவங்களை வைக்கவேண்டும். ஐந்தாம் படியில் ஐந்தறிவு உடைய விலங்குகளையும் பறவைகளையும் வைக்கவேண்டும். ஆறாம் படியில் ஆறறிவு உடைய மனித பொம்மைகளை வைக்கவேண்டும்.

மரப்பாச்சி

ஏழாம் படியில் ஏழறிவு பெற்ற உயிர்களான மகான்கள், சித்தர்கள், ரிஷிகள் ஆகியோரது பொம்மைகளை வைக்கவும். எட்டாம் படியில் பஞ்ச பூதங்களையும் நவகிரகங்களையும் வைக்கவேண்டும் என்று கூறப்பட்டு இருக்கிறது. இந்த உலகம் ஒன்றை ஒன்று சார்ந்து தான் இயங்குகிறது என்ற சார்பியல் தத்துவத்தை விளக்கும் வகையில் தான் இந்த கொலு முறை அமைந்து இருக்கிறது.

கொலு முடிந்த பிறகு பத்தாம் நாள் அம்பாள் வெற்றி பெற்ற களிப்பில் இருப்பார். அப்போது காலையிலேயே ஒருமுறை பூஜை செய்துவிட்டு பொம்மைகளை எடுத்து சுத்தப்படுத்தி பத்திரமாக வைத்துக்கொள்ளவும். ஒவ்வொரு கொலுவின் போது முடிந்த அளவுக்கு புதிய பொம்மைகளை வாங்கி வைத்து சேர்க்கவும். கொலுவில் கட்டாயம் இடம்பெற வேண்டியது மரப்பாச்சி பொம்மை. இந்த பொம்மைக்கு ஒரு சிறப்பு இருக்கிறது. மரப்பாச்சி பொம்மை வெங்கடேச பெருமாளையும் அம்பாளையும் குறிப்பதாக ஐதீகம்.

நைவேத்தியம்

நவராத்திரியில் படைக்கப்படும் நைவேத்தியங்களில் வெங்காயம் சேர்க்காமல் சமைப்பதே சிறப்பு. மந்திரங்கள், சுலோகங்கள் சொல்லலாமா என்று கேட்டால் நன்றாக தெரிந்தால் மட்டுமே சொல்லவும். சில மந்திரங்கள் சரியாக சொல்லப்படா விட்டாலோ தவறாக உச்சரித்து விட்டாலோ மாற்று விளைவுகளை ஏற்படுத்தலாம். எனவே லலிதா சகஸ்ரநாமம், மகிஷாசுரமர்த்தினி பாடல் போன்றவைகளை கேட்கலாம். சொல்லலாம். அம்பாளுக்கு உகந்த பாடல்களை கேட்கலாம். பக்திமயமாகவும் இருக்கும். சரஸ்வதி பூஜை அன்றைக்கு வெள்ளை நிற கொண்டைக்கடலை சுண்டல் செய்து நைவேத்தியம் செய்யவும். விஜயதசமி அன்று குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பவர்கள் அவர்களுக்கு வாங்கிய ரைம்ஸ் புத்தகத்துக்கு அவர்கள் கைகளாலேயே பொட்டு வைத்து பூஜையறையில் வைத்து பூஜிக்க சொல்லலாம்.
Tags:    

Similar News