ஆன்மிகம்
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர்கோவிலில் பவித்ர உற்சவத்தையொட்டி நம்பெருமாள் தீர்த்தவாரி கண்டருள வந்த போது எடுத்தபடம்.

ஸ்ரீரங்கம் கோவிலில் பவித்ர உற்சவத்தையொட்டி நம்பெருமாள் தீர்த்தவாரி

Published On 2019-09-18 05:38 GMT   |   Update On 2019-09-18 05:38 GMT
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பவித்ர உற்சவத்தையொட்டி நம்பெருமாள் தீர்த்தவாரி கண்டருளினார்.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் ஆவணி-புரட்டாசி மாதத்தில் பவித்ர உற்சவம் எனப்படும் நூலிழை திருநாள் 9 நாட்கள் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டுக்கான பவித்ர உற்சவம் கடந்த 9-ந் தேதி தொடங்கி நேற்று (17-ந் தேதி) வரை நடைபெற்றது.

இந்த உற்சவத்தை முன்னிட்டு உற்சவர் நம்பெருமாள் தினமும் மாலையில் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு தங்கக் கொடிமரத்தின் அருகில் உள்ள பவித்ர உற்சவ மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பவித்ர உற்சவத்தின் 7-ம் நாளான கடந்த 15-ந்தேதி நம்பெருமாள் உப நாச்சியார்களுடன் கோவில் திருக்கொட்டாரத்தில் நெல்லளவு கண்டருளினார். பின்னர் திருவந்திகாப்பு கண்டருளி இரவு 9 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.

விழாவின் நிறைவு நாளான நேற்று நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து காலை 8.30 மணிக்கு புறப்பட்டு சந்திர புஷ்கரணி குளத்திற்கு சயனப்பெருமாளுடன் வந்து சேர்ந்தார். அங்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் சந்திர புஷ்கரணியில் காலை 9.30 மணியளவில் நம்பெருமாளுக்கு பதிலாக சயனப்பெருமாளை புனித நீராட வைத்தனர்.

நம்பெருமாள் கரையில் நின்றவாறு சயனபெருமாள் நீராடுவதை கண்டருளினார். இந்த தீர்த்தவாரி நிகழ்ச்சியை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். நம்பெருமாள் சந்திர புஷ்கரணியில் இருந்து புறப்பட்டு பவித்ர உற்சவ மண்டபத்திற்கு காலை 10 மணிக்கு வந்து சேர்ந்தார். அங்கு பகல் 1 மணி முதல் 3 மணி வரை திருமஞ்சனம் கண்டருளினார்.

பின்னர் மதியம் 3.30 மணி முதல் இரவு 7.45 மணி வரை பொதுஜனசேவை நடைபெற்றது. பவித்ர உற்சவ மண்டபத்தில் இருந்து நம்பெருமாள் இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு இரவு 9.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார். பவித்ர உற்சவ நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் வேணுசீனிவாசன், இணைஆணையர் ஜெயராமன், உதவிஆணையர் கந்தசாமி, அறங்காவலர்கள் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.
Tags:    

Similar News