ஆன்மிகம்
மாரியம்மன் ரத்தினஅங்கி அலங்காரத்தில் அருள்பாலித்ததையும் பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்ததையும் காணலாம்.

புன்னைநல்லூர் மாரியம்மன்கோவில் தேரோட்டம்

Published On 2019-09-16 06:01 GMT   |   Update On 2019-09-16 06:01 GMT
தஞ்சை அருகே புன்னைநல்லூர் மாரியம்மன்கோவில் தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
தஞ்சையை ஆண்ட சோழ பேரரசர்கள் தஞ்சையை சுற்றிலும் எட்டு திசைகளிலும் அஷ்டசக்திகளை காவல் தெய்வங்களாக அமைத்தனர். அவ்வாறு தஞ்சைக்கு கீழ்புறத்தில் அமைய பெற்ற சக்தியே புன்னைநல்லூர் மாரியம்மன் ஆகும். இந்த கோவிலின் மூலஸ்தான மாரியம்மன் புற்று மண்ணால் உருவாக்கப்பட்டது ஒரு தனி சிறப்பாகும்.

இத்தகைய சிறப்பு மிக்க புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் தஞ்சை அரண்மனை தேவஸ்தானத்தை சேர்ந்த 88 கோவில்களுள் ஒன்றாகும். இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்திற்கு உட்பட்டதாகும். இந்த கோவிலில் செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படும். இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். அதன்படி இந்த ஆண்டு ஆவணி திருவிழா கடந்த மாதம் 16-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழா நாட்களில் ஒவ்வொரு நாளும் முத்துப்பல்லக்கு, யானை வாகனம், சேஷ வாகனம், குதிரை வாகனம், வெள்ளி ரிஷப வாகனம், படிச்சட்டத்தில் அம்மன் புறப்பாடு நடைபெற்றது. ஆவணி மாத ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையிலும் அம்மனுக்கு மலர் அலங்காரம், மருக்கொழுந்து, தாழம்பூ ஆகியவற்றால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

ஆவணி கடைசி ஞாயிற்றுக்கிழமையான நேற்று அம்மனுக்கு ரத்னஅங்கி அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. அதிகஅளவில் பக்தர்கள் வந்திருந்து நீண்ட வரிசையில் நின்று அம்மனை தரிசனம் செய்தனர். மாலையில் கோவிலில் இருந்து அம்மன் புறப்பட்டு தேரில் எழுந்தருளினார்.பின்னர் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர். இதில் அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜிராஜாபோன்ஸ்லே, உதவி ஆணையர் கிருஷ்ணன், கண்காணிப்பாளர் செல்வம், செயல் அலுவலர் மாதவன் மற்றும் பணியாளர்கள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News