ஆன்மிகம்
திருப்பதி

திருப்பதி பிரம்மோற்சவ விழா: கருட சேவையன்று மலைபாதையில் பைக் செல்ல தடை

Published On 2019-09-14 08:46 GMT   |   Update On 2019-09-14 08:46 GMT
திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ விழா வருகிற 30-ந் தேதி தொடங்குகிறது. கருட சேவை அன்று மலைபாதையில் வாகனங்கள் செல்ல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
திருப்பதி பிரம்மோற்சவ விழாவையொட்டி தேவஸ்தான அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள், போக்குவரத்துக் கழக அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு தேவஸ்தான சிறப்பு அதிகாரி ஏ.வி.தர்மாரெட்டி தலைமை தாங்கினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ விழா வருகிற 30-ந் தேதி தொடங்குகிறது. அதையொட்டி பக்தர்களின் வாகனங்களை நிறுத்த திருமலையில் உள்ள வெளி வட்டச்சாலையில் வாகன நிறுத்துமிடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தட்டுப்பாடு இல்லாமல் லட்டு பிரசாதம் பக்தர்களுக்கு கிடைப்பதற்காக 8 லட்சம் லட்டுகளை உற்சவ நாட்களில் இருப்பு வைத்து பக்தர்களுக்கு வழங்கவும், கடந்த கால அனுபவங்கள் அடிப்படையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளவும் முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கருடசேவை அன்று கேலரிகளில் பக்தர்களை அமர வைப்பதற்காக உள்ளே அனுப்பும் வழி, பக்தர்கள் வெளியே செல்லும் வழி ஏற்பாடு செய்யப்படும்.
வாகன வீதிஉலா வரும் நேரத்தில் பக்தர்கள் மலையப்பசாமிக்கு கற்பூர ஆரத்தி காண்பிக்க வரிசையாக அனுப்பி வைக்கப்படுவார்கள். கருடசேவை அன்று அசம்பாவித சம்பவம் நடக்காமல் இருக்க, தேவஸ்தான பறக்கும் படை மற்றும் போலீசார் அதிக எண்ணிக்கையில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

கருடசேவை அன்று வாகனங்களில் வரும் பக்தர்கள் தங்களின் கார், வேன், ஜீப் ஆகியவற்றை நிறுத்தி வைப்பதற்கான இடம், வாகனத்துக்கான குறிப்பிட்ட நம்பர் ஆகியவை தெரிவிக்கப்படும். வாகனங்களை ஒழங்கு படுத்தி அனுப்ப திருமலையில் வழி காட்டிகள் நிறுத்தப்படுவார்கள். வாகனங்களை ஓட்டிச் செல்லும் டிரைவர்களுக்காக வழிகாட்டிப் பலகைகளும் வைக்கப்படும்.

பிரம்மோற்சவ விழாவையொட்டி திருமலைக்கு வாகனங்களை ஓட்டி வரும் டிரைவர்களுக்கு ரூட் மேப் வழங்கப்படும்.அதில் வாகன நிறுத்துமிடம், செல்லும் வழி ஆகியவை குறிப்பிடப்பட்டு இருக்கும். வாகனங்களை நிறுத்தி விட்டு அங்கிருந்து கோவிலுக்குச் செல்ல பேட்டரி கார்கள் ஏற்பாடு செய்யப்படும். வாகன வீதி பார்த்து விட்டும், சாமி தரிசனம் செய்து விட்டும் வாகன நிறுத்துமிடத்துக்கு வர வயது முதிர்ந்த பக்தர்களுக்கு பேட்டரி கார் வசதி செய்யப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

திருப்பதி புறநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அன்புராஜன் பேசியதாவது:-

பிரம்மோற்சவத்தை காணவரும் பக்தர்களுக்கு சிறப்பான வகையில் பாதுகாப்பு அளிக்கும் விதமாக பல்வேறு மாவட்டங்களில் இருந்து 5 ஆயிரம் போலீசார் வரவழைக்கப்பட உள்ளனர். கூட்ட நெரிசல், திருட்டு சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

திருப்பதியில் 3 சுற்று வழிகளில் தீவிரமாக கண்காணிப்புப்பணி மேற்கொள்ளப்படும். திருப்பதியில் இருந்து திருமலைக்கு செல்லும் மலைப்பாதையில் போக்கு வரத்துக்கு இடையூறு இல்லாமல் வாகனங்கள் சென்று வரஏற்பாடு செய்யப்படும். கருட சேவையையொட்டி இருசக்கர வாகனங்கள் மலைப்பாதைகளில் செல்ல தடைவிதிக்கப்படும் என்றார்.

Tags:    

Similar News