ஆன்மிகம்
பிட்டுக்கு மண் சுமந்த லீலையில் பங்கேற்ற சுப்பிரமணியசாமி பூப்பல்லக்கில் ஊர் திரும்பிய காட்சி.

பிட்டுக்கு மண் சுமந்த லீலையில் பங்கேற்ற சுப்பிரமணியசாமி பூப்பல்லக்கில் ஊர் திரும்பினார்

Published On 2019-09-14 04:08 GMT   |   Update On 2019-09-14 04:08 GMT
பிட்டுக்கு மண் சுமந்த லீலையில் பங்கேற்ற சுப்பிரமணியசாமி பூப்பல்லக்கில் ஊர் திரும்பினார். வழிநெடுகிலுமாக பக்தர்கள் திருக்கண்கள் அமைத்து சாமியை வரவேற்றனர்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆவணி மூலத்திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. அதில் முத்தாய்ப்பாக கடந்த 9-ந்தேதி பிட்டுக்கு மண் சுமந்த லீலை நிகழ்ச்சி கோலாகலமாக நடந்தது. இதில் பாண்டிய மன்னனாக திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசாமி பங்கேற்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதற்காக திருப்பரங்குன்றம் கோவிலில் இருந்து மீனாட்சி பட்டணமான மதுரைக்கு தெய்வானையுடன் சுப்பிரமணிய சாமி பல்லக்கில் புறப்பட்டு வந்தார்.

பிட்டுக்கு மண் சுமந்த லீலையை தொடர்ந்து கடந்த 5 நாட்கள் மதுரையில் மீனாட்சி அம்மன் கோவிலில் தங்கி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த நிலையில் நேற்று மாலை 5 மணி அளவில் சுப்பிரமணியசாமி-தெய்வானைக்கு மகா அபிஷேகமும், சர்வ அலங்காரமும் தீப, தூப ஆராதனையும் நடைபெற்றது. இதையடுத்து வாசனை கமழும் வண்ண மலர்களால் ஆன பூப்பல்லக்கில் தெய்வானையுடன்-சுப்பிரமணியசாமி எழுந்தருளினார்.

இதனைத் தொடர்ந்து மீனாட்சி பட்டணத்தில் சாமி-அம்பாளிடம் விடை பெற்று மேள, தாளங்கள் முழங்க பூப்பல்லக்கில் இருப்பிடம் நோக்கி புறப்பட்டார். கொட்டும் மழையிலும் மதுரையிலிருந்து திருப்பரங்குன்றம் வரை வழிநெடுகிலுமாக பக்தர்கள் திருக்கண்கள் அமைத்து சாமியை வரவேற்றனர். ஒவ்வொரு திருக்கண்ணிலுமாக தெய்வானையுடன் முருகப் பெருமான் எழுந்தருளி அருள்பாலித்தார். 5 நாட்களுக்கு பிறகு அம்பாளுடன் சாமிதனது இருப்பிடமான குன்றத்துக்கு வந்தார்.

Tags:    

Similar News