ஆன்மிகம்
மும்மூர்த்திகள்

மும்மூர்த்திகளும் எழுந்தருளிய உத்தமர் கோவில்

Published On 2019-09-12 06:51 GMT   |   Update On 2019-09-12 06:51 GMT
மும்மூர்த்திகளும் முப்பெருந்தேவியருடன் தம்பதி சமேதராக தனித்தனி சன்னதியில் எழுந்தருளி அருள்பாலிப்பது இந்தியாவிலேயே இது ஒன்றே ஆகும்.
திருச்சி நெ.1 டோல்கேட் அருகே உள்ள பிச்சாண்டார்கோவில் கிராமத்தில் மங்களாசாசனம் செய்யப்பட்ட 108 வைணவ திவ்யதேசங்களில் ஒன்றான உத்தமர்கோவில் அமைந்துள்ளது. ஸ்ரீரங்கத்திற்கு அடுத்து சிறப்புடைய இக்கோவில் திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ளது. மும்மூர்த்திகளும் முப்பெருந்தேவியருடன் தம்பதி சமேதராக தனித்தனி சன்னதியில் எழுந்தருளி அருள்பாலிப்பது இந்தியாவிலேயே இது ஒன்றே ஆகும்.

பிரம்மா

வேறு எந்த கோவில்களிலும் இல்லாத வகையில் படைப்பின் கடவுளான பிரம்மா, குரு பகவான் ஸ்தானத்தில் விமானத்துடன் கூடிய தனி சன்னதியில் தெற்கு முகமாக, அனுக்ரக மூர்த்தியாக அமர்ந்து அருகில் தனி சன்னதியில் சரஸ்வதி தேவியை தன்னுடன் கொண்டு பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.

விஷ்ணு

காக்கும் கடவுளாகிய விஷ்ணு கிழக்கு முகமாக ஆதிசேசனின் மீது பள்ளி கொண்ட நிலையில் புருசோத்தமர் என்ற திருநாமத்துடன் சேவை சாதிக்கிறார். அவர் தனது மார்பில் மகாலட்சுமியையும், நாபியில் பிரம்மாவையும் கொண்டு விளங்குவது சிறப்பான ஒன்றாகும். பெருமாளின் பாதத்தில் அர்த்த மண்டபத்தில் கோஷ்டத்தில் கதம்ப மகரிஷி என்ற மாமுனிவர் பெருமாளை வழிபட்டவாறு நின்ற நிலையில் காணப்படுகிறார். இவரது கடும் தவத்திற்காகத்தான் இத்திருக்கோவிலில் மும்மூர்த்திகளில் ஒன்றாக தோன்றி காட்சியளித்ததாக புராண வரலாறு கூறுகிறது. புருசோத்தமபெருமாள் சன்னதியின் வெளியில் மகாலட்சுமிக்கென தனி சன்னதி உள்ளது. இத்துடன் கோவிலின் முக்கிய சிறப்பம்சமாக மகாலட்சுமி, பூர்ணவல்லித்தாயார் என்ற பெயருடன் அருள்புரிந்து வருகிறார்.

சிவன்

தாருகா வனத்திலிருந்த மகரிஷிகள் கல்வி செருக்கினாலும், தவ வலிமையாலும் ஆணவம் கொண்டு சிவ பக்தியின்றி தாமே உலகில் பெரியவர்கள் என்றும் மக்களை வழிப்படுத்த தாமே போதுமென்றும், மக்களின் கர்மாவே அவரவர்களின் நற்செயல் தீய செயலுத்குரிய பலன்களை அளிப்பதால் இறைவன் ஒருவன் தேவையில்லை என்று கர்வம் கொண்டனர். அதைப்போன்று இவ்வுலகில் உள்ள பெண்கள் மட்டுமின்றி தேவலோக பெண்கள் மற்றும் முப்பெரும் தேவியரும் தங்களை விட அழகில் குறைந்தவர்கள் என்றும் ஈரெழு உலகிலும் பேரழகிகள் தாமே என்றும் ரிஷிபத்தினிகள் ஆணவம் கொண்டனர்.

எனவே ரிஷிகளையும், ரிஷி பத்தினிகளையும் நெறிப்படுத்தி மெய்ஞானம் உண்டாக்க சிவபெருமான் பிச்சாடணராக திருக்கோலம் பூண்டார். எந்த ஒரு இடத்திற்கும் தங்குதடையின்றி சென்று வரவும், எந்த ஒரு வீட்டுக்கதவையும் தட்டி யாரையும் சுலபமாக அணுகி வேண்டியதை கேட்டுப்பெறவும் பிச்சைக்காரன் கோலமே உகந்தது என்று தீர்மானித்த ஈசன் இத்திருத்தலத்தில பிச்சாண்டனார் கோலத்தில் அவதரித்தார். சிவபெருமான் சன்னதியின் வெளிப்புறம் முன் மண்டபத்தில் தனிச்சன்னதியில் அன்னை பராசக்தி சவுந்தர்ய பார்வதி என்ற திருநாமத்துடன் தென் முக சக்தி குருவாக பக்தர்களுக்கு வேண்டுவன அனைத்தையும் வழங்கி வருகிறார். இந்த கோவிலில் தமிழ் 12 மாதங்களிலும் திருவிழா நடைபெறுவது சிறப்புக்குரியது.
Tags:    

Similar News