ஆன்மிகம்
திருவோண திருநாளில் நகர் வலம் வரும் ‘மகா பலி’

திருவோண திருநாளில் நகர் வலம் வரும் ‘மகா பலி’

Published On 2019-09-11 07:50 GMT   |   Update On 2019-09-11 07:50 GMT
கடவுளின் தேசம் என்று அழைக்கப்படும் கேரளாவில் அனைத்து தரப்பு மக்களும் இணைந்து கொண்டாடும் பண்டிகை திருவோணம். இந்த ஆண்டு திருவோண பண்டிகை இன்று (11-ந்தேதி) கொண்டாடப்படுகிறது.
கடவுளின் தேசம் என்று அழைக்கப்படும் கேரளாவில் அனைத்து தரப்பு மக்களும் இணைந்து கொண்டாடும் பண்டிகை திருவோணம். இந்த ஆண்டு திருவோண பண்டிகை இன்று (11-ந்தேதி) கொண்டாடப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் திருவோண நட்சத்திரத்தில் இப்பண்டிகை கொண்டாடப்படுகிறது. சங்க கால ஏடுகளில் விஷ்ணு வின் பிறந்த நாளாகவும், வாமணர் அவதரித்த தினமாகவும் இந்நாளை கூறுவார்கள்.

தமிழின் பத்து பாட்டு நூல்களில் ஒன்றான மதுரை காஞ்சியில் பாண்டிய மக்கள் இவ்விழாவை 10 நாட்கள் கொண்டாடியதாகவும் குறிப்புகள் உள்ளது. இப்படி புராதன சிறப்பு மிக்க இவ்விழா குறித்து கேரளாவில் பல்வேறு கதைகள் கூறப்படுகின்றன. அதில் பிரதானமானது மன்னன் மகாபலியின் ஆணவம் அடக்கிய வாமண அவதாரம் பற்றிய கதையேயாகும்.

இதன்படி கேரளாவை ஆண்ட மன்னன் மகாபலி, மக்கள் மீது மிகுந்த அன்பு கொண்டவன். அதற்கேற்ப மக்களும் மன்னன் மீது அளவற்ற மதிப்பும், மரியாதையும் வைத்திருந்தனர். மன்னரின் ஆணைகளை சிரமேற்கொண்டு நிறை வேற்றினர். நாட்கள் செல்ல, செல்ல மன்னனின் குணம் மாறியது. அவனிடம் ஆணவமும், செருக்கும் குடிகொண்டது. மன்னரிடம் ஏற்பட்ட மாற்றம் கண்டு மக்கள் மனம் கலங்கினர். இறைவனிடம் வேண்டினர்.

மக்களின் வேண்டுதல்களை கேட்ட இறைவன் மன்னன் மகாபலியின் ஆணவம் அடக்க முடிவு செய்தார். அதற்காக அவர் வாமணன் அவதாரம் எடுத்து பூமியில் உதித்தார். குள்ள உருவத்துடன் காணப்பட்ட வாமணன், மன்னன் மகாபலி முன்பு சென்று தனக்கு 3 அடி மண் மட்டும் வேண்டும் என்று கேட்பார். வாமணனின் உருவத்தை கண்டு வியந்த மன்னர், அவர் கேட்ட 3 அடி நிலத்தையும் தருவதாக ஒப்புக் கொண்டார்.

மன்னர் நிலம் தருவதாக கூறியதும் வாமணன் முதல் அடியை எடுத்து வைத்தார். அது மன்னன் மகாபலியின் மொத்த நிலப் பரப்பையும் தாண்டியது. அடுத்த அடி மூலம் விண்ணும் வசப்பட்டது. 3-வது அடியை எங்கு வைப்பது என்று வாமணன் தூக்கிய காலுடன் நிற்க, அப்போது தான் வந்திருப்பது, முனிவர் அல்ல, இறைவன் என்பதை உணர்ந்து கொண்ட மகா பலி, அந்த 3-வது அடியை தன் தலை மீது வைக்கும் படி கூறுவார்.

வாமணரும் 3-வது அடியை மன்னன் மகாபலியின் தலை மீது வைக்க மன்னனின் ஆணவம் அழிந்தது. செருக்கு அகன்றது. அதிசயித்த மன்னன், இறைவன் வாமணரை நோக்கி, இறைவா... தவறை உணர்ந்தேன். மன்னிப்பாயாக என்று கை தொழுது நிற்பான்.

வாமணர் அவதாரத்தில் வந்த இறைவனும் மன்னனை மன்னித்து அருளுவார். அப்போது மன்னன், தான் நேசிக்கும் மக்களை ஆண்டுக்கு ஒருமுறையாவது சந்தித்து செல்ல அனுமதிக்க வேண்டும் என்று வரம் கேட்பார். மகாபலியின் கோரிக்கையை ஏற்று வாமணரும் அந்த வரம் அருளுவார். வாமணர் அருளிய வரத்தின் படி மகாபலி மன்னன், மக்களை பார்க்க வரும் நாளே திருவோண திருவிழா என்பது கேரள மக்களின் ஐதீகம்.

அப்படி பார்க்க வரும் மன்னன் மகாபலியை வரவேற்க கேரளம், சாதி, மத பாகுபாடு இன்றி ஒன்று சேர்ந்து கொண்டாடுவதே ஓணத்தின் சிறப்பு. திருவோண திருநாள் கேரளத்தின் சிங்கம் மாதத்தில் அதாவது தமிழில் ஆவணி மாதத்தில் அஸ்தம் நட்சத்திரத்தில் தொடங்கும்.அன்று முதல் திருவோணம் நட்சத்திரம் வரை 10 நாட்கள் கொண்டாடப்படும்.

2-ம் நாள் சித்திரை, 3-ம் நாள் சுவாதி, 4-ம் நாள் விசாகம், 5-ம் நாள்அனுஷம், 6-ம் நாள்திருக்கேட்டை, 7-ம் நாள் மூலம், 8-ம் நாள் பூராடம், 9-ம் நாள் உத்திராடம் திருவிழாக்களாக கொண்டாடப்படும். ஒவ்வொரு நாளும் வீடுகள் முன்பு பெண்கள் அத்தப்பூ கோலமிடுவார்கள். அறுசுவை உணவும் பரிமாறப்படும். ஆண்கள் ஆட்டம்- பாட்டம், விளையாட்டு என கலக்கி கொண்டிருக்க பெண்கள் ஓண ஊஞ்சலாடி மகிழ்வார்கள்.

இது தவிர ஆறுகளில் படகு போட்டிகளும்களை கட்டும். அப்போது வஞ்சிப்பாட்டு பாடி படகை வேகமாக ஓட்டி செல்வதை காண கண்கோடி வேண்டும். இதனை பார்ப்பதற்காக வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் கேரளா வருவதுண்டு. திருவோண பண்டிகையை கொண்டாட கேரள மக்கள் கசவு எனப்படும் பிரத்தியேக உடை அணிவார்கள். ஆண்களும், பெண்களும், ஏன் குழந்தைகளும் கூட இத்தகைய ஆடைகளை தான் அணிவார்கள். கேரள கலாச்சார உடையில் தான் அன்று முழுவதும் அவர்கள் சுற்றி வருவார்கள்.

ஓணப்பண்டிகைக்கு என்று இன்னொரு சிறப்பும் உண்டு. அதன்படி கேரள மக்கள் நாட்டின் எந்த பகுதியில் வசித்தாலும், ஏன் வெளிநாட்டில் இருந்தாலும் கூட ஓணத்தை கொண்டாட சொந்த ஊருக்கு வர வேண்டும் என்பது மலையாளிகளின் எழுதப்படாத விதி. ஏழையாக இருந்தாலும் இந்த விழாவை கொண்டாடியே ஆக வேண்டும் என்பதும், அப்படி கொண்டாடினால் மட்டுமே அந்த ஆண்டு முழுவதும் முழு ஐஸ்வர்யம் கிடைக்கும் என்பதும் கேரள மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.

இதற்காக வெளிநாடு களில் வசிக்கும் மலையாளிகள் கூட குடும்பத்துடன் கேரளா வந்து விடுவது வழக்கம். ஆண்டுக்கு ஒரு முறை வருவதால் இந்த நாட்களில் கேரளா முழுவதும் உற்சாகம் களை கட்டும். சொந்த பந்தங்களை சந்தித்து நலம் விசாரிப்பது, உறவுகளை அழைத்து விருந்து கொடுத்து மகிழ்வது, நண்பர்களை சந்தித்து உற்சாகம் அடைவது என திரும்பிய பக்கமெல்லாம் மகிழ்ச்சி கரைபுரண்டு ஓடும்.

கேரளா வின் எல்லையில் அமைந்துள்ள குமரி மாவட்டத் திலும் இந்த உற்சாகத்துக்கு குறைவிருக்காது. குமரி மேற்கு மாவட்ட பகுதியில் ஏராளமான கேரள மக்களும் குடியிருந்து வருவதால் அங்கும் ஓணப்பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்படும். இதற்காக குமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்படுவது வழக்கம். இதனால் கேரள மக்களின் உற்சாகத்தில் குமரி மக்களும் இணைந்து அவர்களின் மகிழ்ச்சியில் பங்கெடுத்து கொள்கிறார்கள்.

ஊஞ்சலாடும் பெண்கள்

உலகம் நவீனமாகி விட்டாலும் இன்றும் பழைய கால பொருள்களுக்கு இருக்கும் மவுசு மட்டும் மாறவில்லை. குறிப்பாக மரங்களின் கிளைகளில் ஊஞ்சல் கட்டி ஆடும் மகிழ்ச்சி வேறு எந்த விளையாட்டிலும் கிடைக்காது. கிராமத்தில் சிலுசிலுவென அடிக்கும் காற்றில் கால்களை நீட்டியபடி இளம்பெண்கள் ஊஞ்சலாடி மகிழும் காட்சியை நாள் முழுவதும் பார்த்து கொண்டிருக்கலாம்.

கேரளாவுக்கு சென்றால் ஓணக்கொண்டாட்டம் நடைபெறும் 10 நாட்களில் பெண்கள் ஊஞ்சலாடி மகிழும் காட்சியை காணலாம்.

ஓணச்சத்யா

கேரளாவின் உணவு வகைகள் வித்தியாசமாக இருக்கும். காலை உணவாக புட்டு, பயறு, பப்படம் என்று இன்றும் அங்குள்ள ஓட்டல்களில் உணவு பண்டம் விற்கப்படுகிறது.

ஓணக்காலத்தில் கேரள பாரம்பரிய உணவு வகைகள் விற்கப்படும். அதோடு வீடுகளிலும் இத்தகைய உணவுகள் தயாரிக்கப்படும். அறுசுவை உணவு பற்றிதான் நாம் கேள்வி பட்டிருப்போம். கேரளாவில் ஓணத்தையட்டி 64 வகை உணவுகள் தயாரிக்கப்படுவது சிறப்பாகும்.

இதற்கு ஓணசத்யா என்று பெயர். இந்த விருந்தில் அடை, அவியல், கிச்சடி, பச்சடி, தோரன், சர்க்கர புரட்டி, இஞ்சிப் புளி, எரிசேரி, மிளகாய் அவியல், பரங்கிகாய் குழம்பு என கூட்டு வகைகளும், ரசம், பருப்பு, நெய் சாம்பார், மோர்குழம்பு என குழம்பு வகை களும் பிரதானமாக இடம்பெறும்.

சமைத்த உணவுகளை மக்கள் முதலில் கடவுளுக்கு படைத்து விட்டு பின்னர் நண்பர் களுக் கும், உறவினர்களுக்கும் வழங்கி மகிழ்வார்கள்.
Tags:    

Similar News