ஆன்மிகம்
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கொள்ளிடம் ஆற்றில் இருந்து பக்தர்கள் தீர்த்தம் எடுத்து ஊர்வலமாக வந்த போது எடுத்தபடம்

உத்தமர்கோவிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜைகள் தொடங்கின

Published On 2019-09-09 04:59 GMT   |   Update On 2019-09-09 04:59 GMT
உத்தமர் கோவிலில் கும்பாபிஷேகத்தையொட்டி யாகசாலை பூஜைகள் தொடங்கின.
திருச்சி நெ.1 டோல்கேட் அருகே உள்ள பிச்சாண்டார்கோவில் கிராமத்தில் மங்களாசாசனம் செய்யப்பட்ட 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான உத்தமர்கோவில் உள்ளது. இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டு கோவிலை புனரமைக்கும் பணிகள் நடைபெற்றன. திருப்பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து நாளை மறுநாள் (புதன் கிழமை) கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதையொட்டி நேற்று யாகசாலை பூஜைகள் தொடங்கின.

பிரம்மா, வி‌‌ஷ்ணு ஆகிய இருவருக்கும் 33 அக்னி குண்டங்கள், சிவனுக்கு 36 அக்னி குண்டங்கள் கொண்ட யாகசாலை என தனித்தனியாக 2 யாகசாலைகள் அமைக்கப்பட்டு ஹோமங்கள் மற்றும் பூஜைகள் நடைபெறுகின் றன. இதில் 100-க்கும் மேற்பட்ட வேத விற்பன்னர்கள் கலந்து கொண்டு 6 கால யாகபூஜைகள் நடத்தி வருகிறார்கள். முன்னதாக காலை 8.30 மணிக்கு கொள்ளிடம் ஆற்றில் இருந்து பக்தர்கள் தீர்த்தம் எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு கொண்டுவந்தனர்.

இதைத்தொடர்ந்து சிவன் யாகசாலையில் யாகபூஜை களுக்கான பூர்வாங்க பூஜைகள் நடைபெற்றது. பின்னர் மாலை 6 மணிக்கு முதல்கால யாகபூஜைகள் நடைபெற்றது. இன்று(திங்கட்கிழமை) காலை 8 மணிக்கு 2-ம் கால யாகபூஜைகளும், மாலை 5 மணிக்கு 3-ம் கால யாகபூஜைகளும், நாளை (செவ்வாய்க் கிழமை) காலை 8 மணிக்கு 4-ம் கால யாகபூஜைகளும், மாலை 5 மணிக்கு 5-ம் கால யாகபூஜைகளும் நடைபெறுகிறது.

நாளை மறுநாள் (புதன் கிழமை) 6-ம் கால யாகபூஜையாக, பிரம்மா, விஷ்ணு யாக சாலையில் காலை 5 மணிக்கு விஸ்வரூப தரிசனம், கோ பூஜை, புண்யாகவாஜனம், ததுக்த ஹோமமும், சிவன் யாகசாலையில் காலை 4 மணிக்கு மகா பூர்ணாஹுதி, யாத்ரா தானம் உள்ளிட்டவையும் நடைபெறுகிறது.

இதைத்தொடர்ந்து காலை 6.30 மணிக்கு கடம்புறப் பாடும், காலை 6.45 மணிக்கு பூர்ணவல்லித்தாயார் சமேத புருசோத்தம பெருமாள் மற்றும் ஞான சரஸ்வதி சமேத பிரம்மா ஆகிய தெய்வங்களின் விமானங்களுக்கும், காலை 7 மணிக்கு பிச்சாண்டேஸ்வரர் மற்றும் பரிவார தெய்வங்களின் விமானங்களுக்கும் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. தொடர்ந்து காலை 7.15 மணிக்கு மூலவர் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
Tags:    

Similar News