ஆன்மிகம்
பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தியபோது எடுத்த படம்.

உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோவிலில் பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன்

Published On 2019-09-03 05:22 GMT   |   Update On 2019-09-03 05:22 GMT
உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தியையொட்டி ஏராளமான பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
ஆர்.எஸ்.மங்கலம் அருகே உள்ள உப்பூரில் ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்துக்கு பாத்தியப்பட்ட வெயிலுகந்த விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சதுர்த்தி விழா கடந்த 24-ந்தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. விழாவையொட்டி தினமும் மண்டகப்படிதாரர்கள் நிகழ்ச்சியாக விநாயகர் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதனை தொடர்ந்து கடந்த 31-ந்தேதி விநாயகர்-சித்தி-புத்தி ஆகியோருக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. நேற்று முன்தினம் மாலை தேரோட்டம் நடைபெற்றது. அப்போது ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

விழாவின் முக்கிய நாளான நேற்று காலை 9 மணிக்கு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. இதனையொட்டி விநாயகர் வெள்ளி ரதத்தில் உப்பூர் கடற்கரைக்கு எழுந்தருளினார். அங்கு கடலில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் அங்கிருந்து பக்தர்கள் புடைசூழ கோவிலுக்கு வந்தார்.

அதனை தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்தும், பூக்குழி இறங்கியும் நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவையொட்டி சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

அதனை தொடர்ந்து நேற்று இரவு 10 மணி அளவில் வெயிலுகந்த விநாயகர் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
Tags:    

Similar News