ஆன்மிகம்
பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவில்

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் சதுர்த்தி விழா வருகிற 24-ந்தேதி தொடங்குகிறது

Published On 2019-08-19 07:51 GMT   |   Update On 2019-08-19 07:51 GMT
பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 24-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
திருப்பத்தூர் அருகே உள்ளது பிள்ளையார்பட்டி. இங்கு பிரசித்தி பெற்ற கற்பக விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி விழா மிகவும் கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். இதையொட்டி இந்தாண்டிற்கான விழா வருகிற 24-ந்தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவையொட்டி 10நாட்களும் தினந்தோறும் சிம்ம வாகனம், பூத வாகனம், கமல வாகனம், ரிஷிப வாகனம், மயில் வாகனம், குதிரை வாகனம், பஞ்ச மூர்த்தி அலங்காரம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

வருகிற 29-ந்தேதி அன்று மாலை கஜமுகாசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 9-ம் திருநாளான வருகிற செப்டம்பர் மாதம் 1-ந்தேதி மாலை தேரோட்டம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதையொட்டி அன்று மாலை 4.30 மணியில் இருந்து இரவு 10 மணி வரை கோவிலில் உள்ள மூலவர் சந்தனகாப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். ஆண்டிற்கு ஒரு முறை மட்டும் தான் மூலவருக்கு சந்தன காப்பு அலங்காரம் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

2-ந்தேதி விநாயகர் சதுர்த்தி தினத்தன்று காலையில் கோவில் திருக்குளத்தில் தீர்த்தவாரி உற்சவ நிகழ்ச்சியும், மதியம் மூலவருக்கு திருமுக்கூறுணி மோதக கொழுக்கட்டை படையல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. இரவு பஞ்சமூர்த்தி சுவாமிகள் வீதி உலா நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை ராம. அண்ணாமலை செட்டியார் மற்றும் மீ.நாகப்ப செட்டியார் ஆகியோர் தலைமையில் கோவில் குருக்கள், பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News