புன்னைநல்லூர் மாரியம்மனுக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இந்த கோவிலில் வெள்ளி மற்றும் செவ்வாய்க்கிழமையை விட ஞாயிற்றுக்கிழமை தான் ஏராளமான பக்தர்கள் வந்து அம்மனை தரிசனம் செய்வார்கள். அதுவும் ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து அம்மனை வழிபாடு செய்வார்கள். ஆவணி முதல் ஞாயிற்றுக்கிழமையான நேற்று மாரியம்மனுக்கு மலர்களால், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.
அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக புன்னைநல்லூர் மாரியம்மன்கோவிலுக்கு வந்தனர். இதனால் கூட்டம் அலை மோதியது. கோவிலில் பொதுவழி, சிறப்புவழி என 2 வழிகள் பக்தர்களின் வசதிக்காக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. பக்தர்கள் சிரமம் இன்றி வரிசையில் நின்று தரிசனம் செய்வதற்காக இரும்பு கம்பியால் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டு இருந்தன.
இவற்றின் வழியாக திரளான பக்தர்கள் கோவிலுக்குள் சென்று மாரியம்மனை தரிசனம் செய்தனர். மாலையில் சிம்ம வாகனத்தில் அம்மன் புறப்பாடு நடைபெற்றது.