ஆன்மிகம்
வடமதுரை சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் பக்தர்கள் வெள்ளத்தில் தேர் ஆடி அசைந்து வந்த காட்சி.

வடமதுரை சவுந்தரராஜ பெருமாள் கோவில் தேரோட்டம்

Published On 2019-08-16 06:21 GMT   |   Update On 2019-08-16 06:21 GMT
வடமதுரை சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் ஆடி தேரோட்டம் நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
வடமதுரை சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் ஆடி திருவிழா ஆண்டு தோறும் 13 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டு திருவிழா கடந்த 7-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 7-ம் நாளான கடந்த 13-ந் தேதி சவுந்தரராஜ பெருமாளுக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக கருதப்படும் ஆடி தேரோட்டம் நேற்று மாலை 6 மணியளவில் நடைபெற்றது.

முன்னதாக வடமதுரை ஏழுமலையான் கோவிலில் இருந்து அழகர் கோவில் தீர்த்தம் எடுத்து வரப்பட்டு அபிஷேகங்கள் நடைபெற்றது. அதன்பின் ஸ்ரீதேவி, பூதேவியுடன் சவுந்தரராஜ பெருமாள் தேரில் எழுந்தருளினார். அதன்பின்னர் திரளான பக்தர்கள் கோவிந்தா... கோவிந்தா... என்று கோஷம் முழங்கியபடி திருத்தேரை வடம்பிடித்து வடமதுரை தேரடி வீதிகளில் இழுத்துவந்தனர். வழிநெடுகிலும் பக்தர் கள் அபிஷேகம் செய்து பெருமாளை வழிபட்டனர்.

அதன்பின்னர் திருத்தேர் தேரடியை வந்தடைந்தது. தேரோட்டத்தை முன்னிட்டு சொர்க்கவாசல் முன்பாக காலை 10 மணி முதல் அன்னதானம் வழங்கப்பட்டது. பின்னர் இரவு 9 மணியளவில் தேர்க்கால் பார்த்தல் நிகழ்ச்சியும், அதனைத் தொடர்ந்து விசேஷ மின் அலங்காரத்தில் சப்பரத்தில் சுவாமி புறப்பாடும் நடந்தது.

இந்த ஆடிதேரோட்டத்தில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் மகேஸ்வரி, செயல் அலுவலர் நாராயணி மற்றும் ஊர் பொதுமக்கள் செய்தனர்.
Tags:    

Similar News