ஆன்மிகம்
நெல்லையப்பர் கோவிலில் பவித்திர உற்சவ விழா நடந்தபோது எடுத்தபடம்.

நெல்லையப்பர் கோவிலில் பவித்திர உற்சவ விழா

Published On 2019-08-14 06:21 GMT   |   Update On 2019-08-14 06:21 GMT
நெல்லையப்பர் கோவிலில் பவித்திர உற்சவ விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
உலக மக்கள் அனைவரும் சுபிட்சமாக வாழ வேண்டும் என்பதற்காக கோவில்களில் பூஜைகள் நடத்தப்படுகின்றன. இந்த பூஜைகளில் தெரிந்தோ, தெரியாமலோ குறைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. பூஜைகளில் ஏற்படுகின்ற குறைகளை நீக்கி, சம்பூர்ணமான பலன்களை வழங்குவதற்காகவே செய்யப்படுகின்ற விழாவே பவித்திர உற்சவம் என சொல்லப்படுகிறது.

பட்டு, பருத்தி நூல்களில் செய்யப்பட்ட மாலைகளுக்கு பவித்திரம் என்று பெயர். இந்த நூல் மாலைகளை சுவாமிகளுக்கு அணிவித்து செய்யப்படுகின்ற பூஜையே பவித்திர உற்சவமாகும்.

நெல்லையப்பர் கோவிலில் நேற்று பவித்திர உற்சவ விழா நடந்தது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு சுவாமி, அம்பாளுக்கும் மற்றும் பரிவார தேவதைகளுக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது. காலை 8 மணிக்கு கும்ப பூஜையும், சிறப்பு ஹோமமும் நடந்தது. பகல் 12 மணிக்கு பவித்திரம் என்ற நூல் மாலை அணிவித்தலும், சிறப்பு பூஜையும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர்.

இதைத்தொடர்ந்து இரவு 7 மணிக்கு சுவாமி நெல்லையப்பரும், காந்திமதி அம்பாளும் வெள்ளி ரிஷப வாகனத்திலும், விநாயகர் வெள்ளி மூஞ்சுறு வாகனத்திலும், முருகன் மயில் வாகனத்திலும், சண்டிகேசுவரர் ஆகிய பஞ்ச மூர்த்திகளுடன் நெல்லை டவுன் 4 ரதவீதிகளிலும் வீதி உலா நடந்தது.

விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் யக்ஞ நாராயணன், கண்காணிப்பாளர் கவிதா, பேஸ்கார் முருகேசன் மற்றும் ஊழியர்கள் செய்து உள்ளனர்.
Tags:    

Similar News