ஆன்மிகம்
பக்தர்கள் பால்குடம் எடுத்தும், அலகு குத்தியும் ஊர்வலமாக சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர்.

மேலூர் நாகம்மாள் கோவில் திருவிழா

Published On 2019-08-14 04:38 GMT   |   Update On 2019-08-14 04:38 GMT
மேலூரில் உள்ள நாகம்மாள் கோவில் திருவிழாவையொட்டி ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலம் சென்று சாமி தரிசனம் செய்தனர்.
மேலூரில் நகராட்சி அலுவலகம் அருகே பிரசித்தி பெற்ற நாகம்மாள் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஆடி மாதம் நடைபெறும் திருவிழா, பால்குடம் மற்றும் முளைப்பாரி எடுத்தல் என 2 நாட்கள் நடைபெறும். அதன்படி இந்த ஆண்டிற்கான திருவிழா நேற்று தொடங்கியது. காலை 8 மணி அளவில் மேலூரின் மைய பகுதியான மண்கெட்டி தெப்பக்குளம் முன்பாக இருந்து நகைக்கடை பஜார், காந்திஜி பூங்கா தெரு, பெரியகடை வீதி, அரசு ஆஸ்பத்திரி வரை 2 கி.மீ. தூரத்துக்கு பால்குடம் எடுக்கும் பக்தர்கள் வரிசையாக நின்றனர். பாரம்பரிய வழக்கப்படி நாகம்மாள் கோவில் பூசாரிகள் வந்து விழாவை தொடங்கி வைத்தனர்.

விழாவில் பெண்கள் உள்பட ஏராளமானோர் பால்குடம் எடுத்து நாகம்மாள் கோவிலுக்கு ஊர்வலம் வந்தனர். மேலும் பக்தர்கள் 100-க்கும் மேற்பட்டோர் அலகு குத்தியும் வந்திருந்தனர். மதுரை புறநகர் பகுதிகளில் இருந்து விரதமிருந்து காப்புக்கட்டி வந்த திருநங்கைகளும் பால் குடம் எடுத்து கோவிலுக்கு வந்தனர்.

காலை 9 மணி அளவில் தொடங்கிய ஊர்வலம் மதியம் 1 மணி வரை நடைபெற்றது.

நாகம்மாள் கோவிலில் பெரிய அண்டாக்களில் பக்தர்கள் கொண்டு வந்த பால் ஊற்றப்பட்டு, பின்னர் அங்கிருந்து மின் மோட்டார் மூலமாக பால் எடுத்துச் செல்லப்பட்டு நாகம்மாளுக்கு தொடர்ச்சியாக பாலாபிஷேகம் நடைபெற்றது. பால்குட ஊர்வலம் காரணமாக மேலூரில் நேற்று 4 மணி நேரம் போக்குவரத்து ஸ்தம்பித்தது.

கூட்டத்தை கட்டுப்படுத்தவும், பாதுகாப்பு பணியில் போதுமான அளவு போலீசார் பணியில் இல்லை என்று பக்தர்கள் குற்றம் சாட்டினர்.

திருவிழாவில் இன்று(புதன்கிழமை) மாலை 5 மணி அளவில் ஏராளமான பெண் பக்தர்கள் கலந்து கொள்ளும் முளைப்பாரி ஊர்வலம் நடைபெற உள்ளது.

இதனால் இன்று மாலை 4 மணி முதல் 8 மணி வரை மேலூருக்குள் வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டு புறவழிச்சாலை வழியாக திருப்பி விடப்பட உள்ளது.
Tags:    

Similar News