தாடிக்கொம்பு, வடமதுரை சவுந்தரராஜ பெருமாள் கோவில்களில் ஆடித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
சவுந்தரராஜப்பெருமாள், சவுந்தரவல்லி தாயார் மற்றும் ஆண்டாளுடன் சிறப்பு அலங்காரத்தில் கொடியேற்ற நிகழ்ச்சியை காண எழுந்தருளினார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
வடமதுரையில் உள்ள சவுந்தரராஜபெருமாள் திருக்கோவிலிலும் ஆடித்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக கருடாழ்வார் படம் வடமதுரை நகரின் முக்கிய வீதிகளில் நகர்வலம் கொண்டு செல்லப்பட்டு சன்னதியை அடைந்தது.
இதைத்தொடர்ந்து சவுந்தரராஜபெருமாள், ஸ்ரீதேவி-பூமாதேவியுடன் கொடிமரம் அருகில் அமர்ந்தார். அதன் பின்னர் புண்யாவாஜனம், கலச பூஜை, சோட உபசார பூஜைகள் செய்யப்பட்டு காலை 11.00 மணியளவில் கொடிமரத்தில் திருக்கொடி ஏற்றப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை வழிபட்டனர். அதன்பின்னர் இரவு 9 மணியளவில் அனுமார் வாகனத்தில் பெருமாள் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான திருக்கல்யாணம் வருகிற 13-ந் தேதியும், தேரோட்டம் 15-ந் தேதியும், வசந்தம் முத்துப்பல்லக்கில் பெருமாள் வீதி உலா நிகழ்ச்சி 17-ந் தேதியும் நடைபெற உள்ளது. அதனைத்தொடர்ந்து 19-ந் தேதி விடையாத்தி குதிரை வாகனத்தில் பெருமாள் வீதி உலா நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவடைகிறது.
இந்த திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் மகேஸ்வரி, செயல் அலுவலர் நாராயணி மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.