ஆன்மிகம்
அழகர்கோவில்

அழகர்கோவிலில் 6 மாதத்திற்கு பிறகு மூலவரை தரிசிக்கலாம்: பக்தர்கள் நீராட சிறப்பு ஏற்பாடு

Published On 2019-07-24 06:32 GMT   |   Update On 2019-07-24 06:32 GMT
அழகர்கோவிலில் தைல பிரதிஷ்டை முடிந்து வருகிற 31-ந்தேதி ஆடி மாத சர்வ அமாவாசையையொட்டி கவசங்கள் சாத்தப்பட்டு தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
திருமாலிருஞ்சோலை, தென்திருப்பதி என்று போற்றி புகழ்ந்து அழைக்கப்படும் 108 வைணவ தலங்களில் ஒன்றானது, மதுரையை அடுத்த அழகர்கோவில் கள்ளழகர் கோவில். மிகவும் பிரசித்திபெற்ற இந்த கோவிலில் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை மூலவர் சுவாமிக்கும், தேவியர்களுக்கும் திருத்தைலம் சாத்தப்படுவது வழக்கத்தில் உள்ளது. அதன்படி இந்த ஆண்டு கடந்த பிப்ரவரி மாதம் 2-ந்தேதி திருத்தைலம் மூலவருக்கு சாத்தப்பட்டது. அன்றைய தினம் முதல் பக்தர்கள் உற்சவர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத சுந்தரராஜ பெருமாள் என்ற கள்ளழகரை தரிசனம் செய்து வருகின்றனர். இதில் மூலவருக்கு செலுத்த வேண்டிய பூமாலைகளும், பரிவட்டங்களும் உற்சவருக்கே செலுத்தப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் தைல பிரதிஷ்டை முடிந்து வருகிற 31-ந்தேதி ஆடி மாத சர்வ அமாவாசையையொட்டி கவசங்கள் சாத்தப்பட்டு தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். அன்று முதல் மூலவர் சுவாமிக்கும், தேவியர்களுக்கும் பரிவட்டங்களும், நிறைமாலைகளும், இதர பூஜைகளும் தொடங்கும். 6 மாதங்கள் கழித்து பக்தர்கள் மூலவரை தரிசனம் செய்யவும் விஸ்வரூப காட்சியையும் காண ஆர்வத்துடன் உள்ளனர். ஆடி அமாவாசை அன்று பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு விசேஷ ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

இதுதவிர ஆடி அமாவாசை அன்று அழகர்மலை உச்சியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க நூபுர கங்கையில் புனித நீராடுவதற்காக மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள். புனித நீராடிய பின் அங்குள்ள ராக்காயி அம்மனை தரிசனம் செய்வார்கள். இதற்காக பக்தர்கள் வரிசையில் செல்வதற்கு சிறப்பு ஏற்பாடு செய்யப்படுகிறது.

மேலும் முருகப்பெருமானின் ஆறாவது படை வீடான சோலைமலை முருகன் கோவிலிலும் ஆடி அமாவாசை அன்று சிறப்பு பூஜைகளும், அபிஷேகங்களும் நடைபெறும். இந்த ஆடி அமாவாசை விழா ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி மாரிமுத்து மற்றும் கண்காணிப்பாளர்கள், திருக்கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News