ஆன்மிகம்
பாரிஜாதம்

தெய்வீக மரம் பாரிஜாதம்

Published On 2019-07-23 08:07 GMT   |   Update On 2019-07-23 08:07 GMT
இந்திரலோகத்தில் இருக்கும் தெய்வீக மரமே, ‘பாரிஜாதம்’ அல்லது ‘பவளமல்லி’ என்று புராணங்கள் சொல்கின்றன. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
இந்திரலோகத்தில் இருக்கும் தெய்வீக மரமே, ‘பாரிஜாதம்’ அல்லது ‘பவளமல்லி’ என்று புராணங்கள் சொல்கின்றன. இந்த மரத்தில் இருந்து பூக்கும் மலர்கள் இனிய மணம் வீசும் தன்மை கொண்டவை. இது இந்திரனின் மனைவி சாச்சிக்கு மிகவும் பிடித்தமானது ஆகும். பாற்கடலை கடைந்த போது வெளிவந்த இந்த மரத்தை, இந்திரன் தன்னுடைய தேவலோகத்தில் வைத்துக் கொண்டான்.

தேவலோகத்தில் இருந்த பாரிஜாத மரம், நாரதரின் கலகத்தால், கிருஷ்ணரின் மூலமாக பூமிக்கு கொண்டு வரப்பட்டது. ஒரு முறை நாரதர், தேவலோகத்தில் இருந்து பாரிஜாத மலர்களால் ஆன மாலையைக் கொண்டு வந்து கிருஷ்ணரிடம் கொடுத்தார். அந்த மாலையை கிருஷ்ணர், ருக்மணியிடம் கொடுத்தார். இதையறிந்த சத்யபாமா, தேவலோக மலர் மாலையை தனக்கு தராதது பற்றி கேட்டு கோபித்துக் கொண்டாள்.

உடனே கிருஷ்ணர், “தேவலோகத்தில் இருந்து பாரிஜாத மரத்தையே கொண்டு வந்து உன்னுடைய அந்தபுரத்தில் வைக்கிறேன்” என்று கூறினார்.

ஆனால் இந்திரன், தேவலோக மரத்தை பூமிக்கு கொண்டு செல்ல மறுப்பு தெரிவித்தான். இதனால் கிருஷ்ணர், இந்திரனோடு போரிடும் சூழல் ஏற்பட்டது. இதையடுத்து ரிஷிகள் பலரும் பேசி இந்திரனை சமாதானம் செய்தனர். அதன்பிறகு கிருஷ்ணர், பாரிஜாத மரத்தைக் கொண்டு வந்து, சத்யபாமாவின் அந்தபுரத்தில் வைத்தார். அதே நேரத்தில் அதில் இருக்கும் மலர்கள் ருக்மணியின் அந்தபுரத்தில் விழும்படியாகவும் செய்து, இருவருக்குமான பிணக்கை தீர்த்து வைத்தார்.

பாரிஜாத மலர் தொடர்பாக இன்னுமொரு புராணக்கதையும் சொல்லப்படுகிறது. பாரிஜாதகா என்னும் இளவரசி, சூரியன் மேல் விருப்பம் கொண்டவளாக இருந்தாள். ஆனால் சூரியன், அவளை ஏற்க மறுத்து விட்டார். இதனால் அவள் தன்னை நெருப்பால் அழித்துக் கொண்டாள். அவளது சாம்பலில் இருந்து தோன்றியதே பாரிஜாத மரம் என்றும், தன்னை கைவிட்ட சூரியனை காண சகிக்காதவளாய், இரவில் மட்டுமே பூக்களைத் தருவதாகவும், தன்னுடைய கண்ணீராக பூக்களை சொரிவதாகவும் சொல்லப்படுகிறது.
Tags:    

Similar News