ஆன்மிகம்
கோமதி சக்கரம்

மகாலட்சுமிக்கு பிரியமான கோமதி சக்கரம்

Published On 2019-07-22 08:55 GMT   |   Update On 2019-07-22 08:55 GMT
கோமதி சக்கரம் என்பது சுபத்துக்கான பொருள். இது இருந்தால் மகாலட்சுமியே இருப்பதாக வணங்குவார்கள். கோமதி சக்கரத்தால் எல்லா பிரச்சினைகளுமே படிப்படியாக குறையும்.
கோமதி நதியில் உருவாகும் ஒருவகை கற்கள் தான் கோமதி சக்கரம். வட மாநிலங்களில் கோமதி சக்கரம் என்பது மிக முக்கியமான பூஜை பொருள். இது இல்லாமல் பூஜையே செய்ய மாட்டார்கள். கோமதி சக்கரம், மகாலட்சுமி சோழி,கொட்டை பாக்கு இந்த மூன்றும் தவறாது பூஜைகளில் இடம்பெறும். கோமதி சக்கரம் என்பது சுபத்துக்கான பொருள். இது இருந்தால் மகாலட்சுமியே இருப்பதாக வணங்குவார்கள்.

வாஸ்து பிரச்சினைகள், கணவன்-மனைவி சச்சரவுகள், வியாபாரத்தில் நஷ்டம், பணியிடத்தில் சிக்கல்கள், பிள்ளைகள் பெற்றோர் பேச்சை கேட்காமல் நடப்பது போன்ற பிரச்சினைகளுக்கு பித்ருக்கள் முக்கிய காரணம் வகிப்பார்கள். அவர்களை சாந்தப்படுத்த இது உதவும். மேலும் பில்லி, சூனியம் போன்ற விஷயங்களில் இருந்தும் விடுபடலாம்.

கோமதி சக்கரத்தால் எல்லா பிரச்சினைகளுமே படிப்படியாக குறையும். இதை சிலர் மூட நம்பிக்கை என்றுகூட சொல்லலாம். ஆனால் இதை முன்னோர் நம்பிக்கை என்றுதான் சொல்வேன். இப்போது நாம் வாழும் வாழ்க்கை முறை எல்லாமே நம் முன்னோர் வகுத்த வழிமுறைகள் தான். உணவில் இருந்து உடை, உறைவிடம் உள்பட எல்லாமே அவர்கள் காட்டிய வழிகள் தான்.

நாமாக புதிதாக எதை கண்டுபிடித்தோம்ப நான் சொல்லும் இந்த ஆன்மீக பொருட்களுக்கு உருவானபோதே சக்தி இருந்து இருக்குமா? என்றால் சந்தேகம் தான். ஆனால் நம் முன்னோர்கள் வழிவழியாக வணங்கி வந்து இருக்கிறார்கள். எனவே அவற்றுக்குள் சக்தி குடிகொண்டு இருக்கிறது. கல்லுக்கு தானே கடவுள் என்று நம்பிக்கையால் சக்தி கொடுக்கிறோம். இந்த 11 பொருட்களில் சக்தி உள்ளதை நான் பல சம்பவங்களில் கண்கூடாக பார்த்து வருகிறேன்.

கோமதி சக்கரத்தை வெறும் கல் தானே என்று எண்ண வேண்டாம். என் அனுபவத்தில் அதன் அதிசயங்களை நேரடியாக பார்த்துள்ளேன். தீராத தலைவலி, கடன் தொல்லை, கட்டட பிரச்சினைகள், அமானுஷ்ய சக்திகளின் அட்டகாசம் என அனைத்து பிரச்சினைகளும் தீர்க்கப்பட்டுள்ளன. கோமதி சக்கரத்துக்கு அவ்வளவு சக்தி இருக்கிறது. வெளியில் கட்டும்போது மஞ்சள் துணியில் கட்டும் நாம் வீட்டுக்குள் வைக்கும்போது சிவப்பு துணியில் கட்டி வைக்கவேண்டும்.



கோமதி சக்கரத்தை நகைகளாகவும் அணிந்துகொள்ளலாம். அணிகலன்களாகவும் தயாரித்து வருகிறேன். இந்த பொருட்கள் எதற்குமே வணங்கும் முறையில் எந்த கட்டுப்பாடும் இல்லை. நாம் எல்லோருமே இயற்கையாக உருவாக்கப்பட்டவர்கள். எனவே இயற்கையான வாழ்க்கை வாழ வேண்டும். தாம்பத்யம், மாதவிலக்கு என்று எந்த கட்டுப்பாடும் இல்லை. அதுபோன்ற சமயங்களில் பூஜையறை பக்கம் மட்டும் செல்வதை தவிர்க்கலாம். அதுவே நோய்த்தொற்றுக்காக சொல்லப்பட்டது தான்.

அசைவம் சாப்பிடுவதற்கும் இவற்றை பயன்படுத்துவதற்கும் எந்த தொடர்பும் இல்லை. தாராளமாக சாப்பிடலாம். தீட்டு வீடுகளுக்கு செல்லும்போது மட்டும் கவனமாக இருக்கவேண்டும். திரும்ப வந்து நாம் குளிப்பதை போல இந்த பொருட்களையும் பாலில் கழுவி வைக்கவேண்டும். நான் எப்போதுமே ஆன்மீக விஷயங்களை கண்மூடித்தனமாக ஏற்றுக்கொள்ளாமல் அதன் பின்னணியில் இருக்கும் அறிவியலையும் ஆராய்வேன். அப்படி கோமதி சக்கரத்தையும் ஆராய்ந்து தெளிவு அடைந்த பின்னர் தான் பரிந்துரைக்க தொடங்கினேன். பூமியில் எந்த பொருட்கள் எல்லாம் சுழி வடிவில் இருக்கிறதோ அவை எல்லாமே பிற கிரகங்களின் ஈர்ப்புக்கு ஆளாகும் என்று தெரிய வந்தது. கோமதி சக்கரத்திலும் இயற்கையாகவே சுழிகள் இருக்கின்றன. எனவேதான் அதற்கு சக்திகள் அதிகம். கோமதி சக்கரத்தின் கண்கள் நாகத்தின் கண்களை போலவே இருக்கும். எனவே நாகதோஷத்தை போக்கவும் செய்கிறது.

இந்த கோமதி சக்கரம் புராணங்களில் சுதர்சன சக்கரத்துக்கு இணையாக சொல்லப்பட்டு இருக்கிறது. சுதர்சன சக்கரம் என்பது மனித கண்களுக்கு புலப்படாத ஒரு பொருள். ஆனால் கோமதி சக்கரத்தில் சுதர்சன சக்கரத்திற்கு சமமான சக்தி இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். இன்றுதான் நாம் வாட்ச், நகை போன்றவற்றை பரிசாக அளிக்கிறோம். புராண காலங்களில் இந்த கோமதி சக்கரம் தான் பரிசாக தரப்பட்டு இருக்கிறது. மகாவிஷ்ணுவே லட்சுமிக்கு இதை பரிசாக கொடுத்து இருக்கிறார். லட்சுமி தாயாரும் இதை பத்திரமாக வைத்துக்கொள்வார். எனவே அவருக்கு மிகவும் பிடித்தமான பொருள் ஆகிறது.


கோமதி சக்கரத்துக்கு அளப்பரிய சக்தி இருக்கிறது. விஷ்ணு கிருஷ்ண பரமாத்மாவாக அவதாரம் எடுத்து போருக்கு சென்றபோது ஒரு மரத்தை உருவாக்கினார். அந்த மரம் தான் கோமதி மரம். அந்த மரத்தில் கனிகள் காய்த்து தொங்கின. மரத்தை ராதையிடம் காட்டி நான் வரும்வரை இதில் தங்கிக்கொள். பசித்தால் பழங்களை சாப்பிட்டுக்கொள் என்று சொல்லிவிட்டு சென்றதாக புராணங்கள் சொல்கின்றன. இந்த பழங்கள் தான் கடினமாகி கற்களாக மாறியதாக சொல்கிறார்கள். இப்போது சில இணைய தளங்களில் செயற்கையாக தயாரிக்கப்பட்ட கோமதி சக்கரத்தை விற்கிறார்கள். ஆனால் நீங்கள் நினைத்தது நடக்க வேண்டும் என்றால் இயற்கையாக விளைந்த அசல் கோமதி சக்கரத்தை தான் பயன்படுத்த வேண்டும். 
Tags:    

Similar News