ஆன்மிகம்
திருக்கண்டேஸ்வரம் நடனபாதேஸ்வரர் கோவிலில் தெப்ப உற்சவம் நடைபெற்ற காட்சி.

திருக்கண்டேஸ்வரம் நடனபாதேஸ்வரர் கோவிலில் தெப்ப உற்சவம்

Published On 2019-07-19 05:28 GMT   |   Update On 2019-07-19 05:28 GMT
திருக்கண்டேஸ்வரம் நடனபாதேஸ்வரர் கோவிலில் தெப்ப உற்சவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
நெல்லிக்குப்பம் திருக்கண்டேஸ்வரத்தில் பிரசித்தி்பெற்ற நடனபாதேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பிரம்மோற்சவம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு பிரம்மோற்சவத்துக்கான கொடியேற்ற நிகழ்ச்சி கடந்த 5-ந் தேதி நடைபெற்றது. இதனை தொடர்ந்து தினமும் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. இரவில் வெவ்வேறு வாகனங்களில் சாமி வீதி உலா நடந்தது. மேலும் கடந்த 11-ந் தேதி திருக்கல்யாண உற்சவமும், 13-ந் தேதி தேரோட்டமும் நடைபெற்றது.

சிகர நிகழ்ச்சிகளில் ஒன்றான தெப்ப உற்சவம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதையொட்டி நடனபாதேஸ்வரர், ஹஸ்டதாலாம்பிகை மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. பின்னர் நடனபாதேஸ்வரர், ஹஸ்டதாலாம்பிகை அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பின்னர் சாமி வீதி உலா நடைபெற்றது.

இதனைத்தொடர்ந்து இரவு கோவில் வளாகத்தில் உள்ள குளத்தில் தெப்ப உற்சவம் விமரிசையாக நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் நடனபாபாதேஸ்வரர், ஹஸ்டதாலாம்பிகை ஆகியோர் எழுந்தருளி 5 முறை வலம் வந்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு பயபக்தியுடன் சாமி கும்பிட்டனர். பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் முத்துலட்சுமி மற்றும் சரவணன் செய்திருந்தனர். பூஜைக்கான ஏற்பாடுகளை சேனாதிபதி குருக்கள் செய்திருந்தார்.
Tags:    

Similar News