ஆன்மிகம்
காரைக்கால் அம்மையார்

சிவனடியாருக்கு அமுது படைத்த அம்மையார்

Published On 2019-07-16 09:02 GMT   |   Update On 2019-07-16 09:02 GMT
அம்மையார் வாழ்க்கை வரலாறை விளக்கும் வகையில், காரைக்கால் அம்மையார் கோவிலில் மாங்கனித் திருவிழா 5 நாட்களும், தொடர்ந்து பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் 26 நாட்களும் என ஒரு மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
காரைவனம் என்றுஅழைக்கப்பட்ட காரைக்காலில் வணிகர்களின் தலைவராக இருந்த தனதத்தன், தர்மவதி தம்பதியரின் மகள் தான் காரைக்கால் அம்மையார். பேரழகும், தெய்வீக அம்சமும் கொண்ட அம்மையார், சிறுவயதில் இருந்தே சிவபெருமான் மீது அதீத பக்தி கொண்டவர். இவரை, நாகையில் உள்ள நீதிபதி ஒருவரின் மகனான பரமதத்தர் என்ற வணிகருக்கு மணமுடித்து கொடுத்தனர். ஒரே மகள் என்பதால், காரைக்காலிலேயே வணிகம் செய்து, வசிக்க வழிவகை செய்தனர்.

சிவபெருமான் வழங்கிய மாங்கனி

ஒருசமயம் பரமதத்தர் தனது கடையில் இருந்தபோது, வியாபாரி ஒருவர், தனது வீட்டுத்தோட்டத்தில் காய்த்த 2 மாங்கனிகளைக் கொண்டுவந்து கொடுத்தார். அக்கனிகளை பெற்ற பரமதத்தர், அதனைத் தன் வீட்டிற்கு அனுப்பி வைத்தார்.

அச்சமயம் அம்மையாரின் சிவபக்தியை சோதிக்கும் பொருட்டு, அங்கு சிவபெருமான் சிவனடியார் வேடத்தில் உணவு வேண்டி வந்தார். வந்து இருப்பது சிவபெருமான் என்பதை அறியாமலேயே அவரை வரவேற்று தயிர் கலந்த அன்னம் படைத்து, கணவர் கொடுத்து அனுப்பிய ஒரு மாங்கனியையும் தந்து உபசரித்தார். அதனை உண்ட சிவனடியார் அம்மையாரை வாழ்த்திச் சென்றார்.

பின்னர், மதிய உணவிற்கு வீட்டிற்கு வந்த பரமதத்தருக்கு உணவு பரிமாறி மீதமிருந்த ஒரு மாங்கனியையும் வைத்தார். அதன் சுவை நன்றாக இருக்கவே, தான் கொடுத்து அனுப்பிய மற்றொரு மாங்கனியையும் தனக்கு வைக்கும்படி கேட்டார் பரமதத்தர். இதை எதிர்பாராத அம்மையார் செய்வதறியாது சிவபெருமானை வேண்டி மாங்கனி பெற்றார். அதனை கணவருக்கு படைத்தார். முதலில் வைத்த மாங்கனியைவிட இது அதிக சுவையுடன் இருக்கவே சந்தேகமடைந்த பரமதத்தர், இது ஏது? என்றார். அம்மையார் நடந்ததை கூறினார்.

பிரிந்து சென்ற பரமதத்தர்

அக்காரணத்தை பரமதத்தர் நம்பவில்லை. சிவபெருமான் கனி தந்தது உண்மையானால், மீண்டும் ஒரு கனியை வரவழைக்கும்படி கூறினார். அம்மையார் சிவபெருமானை வணங்க, மீண்டும் ஒரு மாங்கனி மேலிருந்து அவரது கையில் வந்து தங்கி, பிறகு மறைந்தது. இதைக் கண்டு வியந்த பரமதத்தர், நீ மனிதப்பிறவி இல்லை. தெய்வப் பெண். உன்னுடன் நான் இனி வாழ்தல் சரியாகாது என்று கூறி, அம்மையாரை விட்டு பிரிந்து, வாணிபம் செய்ய கடல் கடந்து பாண்டிய நாடு சென்றார்.

மதுரை மாநகர் சென்ற பரமதத்தர் மற்றொரு பெண்ணை மணம் முடித்து அங்கேயே வாழ்ந்துவந்தார். சிலகாலம் கழித்து அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு அம்மையாரின் திருப்பெயரான புனிதவதியார் என்ற பெயரையே வைத்தார்.

கயிலாயம் சென்றார்

பரமதத்தர் பாண்டிய நாட்டில் இருக்கும் தகவல் அறிந்து உறவினர்கள் அம்மையாரை அழைத்துக் கொண்டு பாண்டிய நாடு சென்றனர். அம்மையாரை கண்ட பரமதத்தர், அவரைத் தெய்வமாக வணங்கி தனது 2-வது மனைவி, குழந்தையுடன் காலில் விழுந்தார். கணவர் தன் காலில் விழுந்ததை ஏற்க முடியாத அம்மையார், தனது அழகுமேனி அழிந்து, பேய் வடிவத்தை வழங்குமாறு இறைவனிடம் வேண்டினார். தொடர்ந்து, அம்மையார் இறைவனை காண கயிலாயம் சென்றார். இறைவன் உறையும் புனிதமான இடம் என்பதால், அங்கு தரையில் கால் ஊன்றாமல், தலைகீழான நிலையில் அம்மையார் நடந்து சென்றார். இதனை பார்த்து மெச்சிய சிவபெருமான், “அம்மையே வருக. அமர்க” என்றார். அதன்படி இறைவனின் திருவடி அடைந்தார். 11 பாடல்கள் கொண்ட திருப்பதிகம் பாடி இறைவனின் நிழலில் வீற்றிருக்கலானார், காரைக்கால் அம்மையார்.

63 நாயன்மார்களில் ஒருவரான காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறை விளக்கும் வகையில், காரைக்கால் அம்மையார் கோவிலில் மாங்கனித் திருவிழா 5 நாட்களும், தொடர்ந்து பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் 26 நாட்களும் என ஒரு மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
Tags:    

Similar News