ஆன்மிகம்
வடக்குரத வீதியில் பக்தர்கள் வெள்ளத்தில் சுவாமி தேர் அசைந்தாடி வந்தபோது எடுத்த படம்.

கோலாகலமாக நடந்தது நெல்லையப்பர் கோவில் தேரோட்டம்

Published On 2019-07-15 03:10 GMT   |   Update On 2019-07-15 03:10 GMT
நெல்லையப்பர் கோவில் ஆனித்திருவிழா தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேர் வடம் பிடித்து இழுத்தனர்.
தென்தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற நெல்லை டவுன் நெல்லையப்பர்- காந்திமதி அம்பாள் ஆனித்தேரோட்டம் திருவிழா கடந்த 6-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று கோலாகலமாக நடந்தது. 9-ம் நாள் நிகழ்ச்சியான நேற்று அதிகாலை சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் மேள தாளம் முழங்க சுவாமிகள் தேரில் எழுந்தருளினர். சுவாமி தங்க ஜரிகையுடன் வெண்பட்டும், அம்பாள் சிவப்பு நிற கரையுடன் மஞ்சள் பட்டும் அணிந்து இருந்தனர்.

தேரோட்டத்தை காண அதிகாலையில் இருந்தே சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பக்தர்கள் வரத்தொடங்கினர். நெல்லை டவுன் நான்கு ரதவீதிகளிலும் பக்தர்கள் குவிந்து இருந்தனர். காலை 8.45 மணிக்கு தேர் வடம் பிடித்து இழுக்கும் நிகழ்ச்சியை நெல்லை மாவட்ட கலெக்டர் ‌ஷில்பா வடம் பிடித்து சுவாமி தேரை இழுத்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுக்க தொடங்கினர்.



சுவாமி தேர் பக்தர்கள் வெள்ளத்தில் ஆடி அசைந்து வந்த காட்சி பக்தர்களை பரவசப்படுத்தியது. மதியம் 1.20 மணியளவில் சுவாமி தேர் போத்தீஸ் கார்னர் பகுதியில் வந்தது.

பின்னர் அம்பாள் தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தொடங்கினர். இதற்கிடையில் சுவாமி தேரை நிலைக்கு கொண்டு வரும் பணியில் பக்தர்கள் ஈடுபட்டனர். பின்னர் மாலை 5.10 மணிக்கு சுவாமி தேர் நிலைக்கு கொண்டு வரப்பட்டது. அம்பாள் தேர் 6 மணிக்கு நிலைக்கு வந்தது. முன்னதாக விநாயகர் தேர், சுப்பிரமணியர் தேர்கள் இழுக்கப்பட்டன. இறுதியில் சண்டிகேஸ்வரர் தேர் இழுக்கப்பட்டது. தேர் ஒரே நாளில் நிலைக்கு கொண்டு வரப்பட்டன.

நெல்லை மாநகர போலீஸ் கமி‌‌ஷனர் பாஸ்கரன் உத்தரவின் பேரில் சுமார் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

நெல்லையப்பர் கோவில் தேரோட்டத்தையொட்டி அந்த பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருந்தது.
Tags:    

Similar News