ஆன்மிகம்
இதிகாசங்களில் வரும் புராண கதாபாத்திரங்கள்

இதிகாசங்களில் வரும் புராண கதாபாத்திரங்கள்

Published On 2019-07-13 08:15 GMT   |   Update On 2019-07-13 08:15 GMT
புராணங்கள் மற்றும் இதிகாசங்களில் வரும் கதாபாத்திரங்களையும், சில அற்புதப் படைப்புகளையும் பற்றி இந்தப் பகுதியில் விரிவாக பார்க்கலாம்.
விராடன்

மகாபாரதத்தில் மத்சய நாட்டின் மன்னனாக இருந்தவர் விராடன். இவரது மனைவி சுதேஷ்னை. இவர்களுக்கு உத்தரன் என்ற மகனும், உத்தரை என்ற மகளும் இருந்தனர். கவுரவர்களுடன் சூதாட்டத்தில் ஈடுபட்ட பாண்டவர்கள், தங்களுடைய நாட்டையும், உைடமைகளையும் இழந்து 12 ஆண்டுகள் வன வாசம் சென்றனர். அதன்பிறகு ஒரு ஆண்டு அஞ்ஞான வாசம் (தலைமறைவு வாழ்க்கை) வாழ்ந்தனர். அப்போது தலைமறைவு வாழ்க்கைக்காக பாண்டவர்கள், சரண்புகுந்த நாடுதான் மத்சய தேசம். விராடனின் அரசவையில் பாண்டவர்கள் ஓராண்டு காலம் வாழ்ந்தனர். அந்த நேரத்தில் விராடனின் மைத்துனன் கீசகன், திரவுபதியின் மீது ஆசை கொண்டான். அவனை பீமன் கொன்றான். ஒரு கட்டத்தில் விராடனும், பாண்டவர்களும் சொந்தங்களாக மாறினார்கள். பாண்டவர்களில் ஒருவனான அர்ச்சுனனின் மகன் அபிமன்யுவுக்கு, விராடனின் மகன் உத்தரை மணம் முடித்து வைக்கப்பட்டாள். பின்னர் குருசேத்திரப் போரில் பாண்டவர்களுக்கு ஆதரவாக விராடனும் அவரது மகன் உத்தரனும் போரிட்டனர். ஆனால் அவர்கள் இருவரும் துரோணாச்சாரியாரால் கொல்லப்பட்டனர்.

விராதன்

ராமாயண இதிகாசத்தில் தண்டகாரண்யம் என்ற வனப்பகுதியில் வாழ்ந்த அசுரனே இந்த விராதன். ஒற்றைக் கண் கொண்டவன். இவன் ராமன், தனது மனைவி சீதை மற்றும் லட்சுமணனுடன் வனவாசத்தில் ஈடுபட்டிருந்தபோது, அவர்களை அச்சுறுத்தினான். ஒரு கட்டத்தில் சீதையை கவர்ந்து செல்லவும் முற்பட்டான். இதனால் கோபம் கொண்ட ராமனும், லட்சுமணனும் இணைந்து, அம்புகளை விட்டு விராதனின் இரு கைகளையும் துண்டித்தனா். பின்னர் அவனை பெரிய குழி வெட்டி அதற்குள் தள்ளி, தீவைத்து எரித்தனர். அப்போது அந்த தீக்குள் இருந்து ஒரு கந்தர்வன் வெளிப்பட்டான். அவன் பெயர் ‘தும்புரு.’ இவன் குபேரனின் சாபத்தால் தண்டகாரண்ய வனத்தில் அசுரனாக சுற்றிக்கொண்டிருந்தான். அவனுக்கு ராமனால் சாப விமோசனம் கிடைக்கும் என்பதன்படி அவன் இவ்வாறு கொல்லப்பட்டான்.

விஸ்வகர்மா

இவர் தேவலோகத்தின் சிற்பியாக கருதப்படுகிறார். இவரை ‘தேவதச்சன், தேவ சிற்பி’ என்றும் அழைப்பார்கள். இவரது மகள் சமுக்யாதேவி. இவளை சூரியனுக்கு விஸ்வகர்மா மணம் முடித்துக் கொடுத்தார். சூரியனின் வெப்பத்தைத் தாங்க முடியாத அவள், சாயாதேவி என்ற தன்னுடைய நிழலை சூரியனிடம் விட்டு விட்டு, தந்தையிடம் வந்தாள். ஆனால் அவளுக்கு வாழ்க்கையின் தத்துவத்தை உணர்த்தி மீண்டும் சூரியனிடம் அனுப்பிவைத்தார், விஸ்வகர்மா. இவர் பிரம்மனின் படைப்புத் தொழிலுக்கு உதவியாக 14 உலகங்களை அமைத்தார். சிவ பெருமானுக்கு திரிசூலம், விஷ்ணுவுக்கு சுதர்சன சக்கரம், முருகப்பெருமானுக்கு வேல், குபேரனுக்கு சிவிகை, ராவணன் வைத்திருந்த புஷ்பக விமானம், எமன் மற்றும் வருணனின் அரண்மனைகள் போன்றவற்றை வடிவமைத்தவர் இவர்தான். கதன் என்ற அசுரனை திருமால் வதம் செய்தார். அந்த அசுரனின் எலும்பில் இருந்து ஒரு ஆயுதத்தை விஸ்வகர்மா உருவாக்கினார். அந்த ஆயுதமே ‘கதாயுதம்’ என்று பெயர் பெற்றது. அதே போல் அசுரர்களை எதிர்த்து போராட இந்திரனுக்கு சக்தி வாய்ந்த ஒரு ஆயுதம் தேவைப்பட்டது. அதற்காக ததிசி என்ற முனிவரின் முதுகெலும்பில் இருந்து உருவாக்கப்பட்டதே ‘வச்சிராயுதம்’ ஆகும்.
Tags:    

Similar News