ஆன்மிகம்
காரைக்கால் அம்மையார்

மாங்கனித் திருவிழா மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியுடன் இன்று தொடங்குகிறது

Published On 2019-07-13 04:54 GMT   |   Update On 2019-07-13 04:54 GMT
காரைக்கால் அம்மையார் கோவில் மாங்கனித் திருவிழா மாப்பிள்ளை அழைப்புடன் இன்று மாலை தொடங்குகிறது.
இறைவனின் திருவாயால் ‘அம்மையே’ என்று அழைக்கப்பட்டவரும், 63 நாயன்மார்களில் அமர்ந்த நிலையில் அருள்பாலித்து வருபவர் காரைக்கால் அம்மையார். காரைக்கால் பாரதியார் வீதியில் அம்மையார் கோவில் உள்ளது. இக்கோவிலில் காரைக்கால் அம்மையாரின் வரலாற்று நிகழ்வுகளை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் மாங்கனித் திருவிழா சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு மாங்கனித் திருவிழா இன்று (சனிக்கிழமை) மாலை மாப்பிள்ளை அழைப்புடன் தொடங்குகிறது. இதையொட்டி இன்று இரவு 7.30 மணிக்கு பரமதத்த செட்டியாரை காரைக்கால் ஆற்றங்கரை சித்தி விநாயகர் கோவிலில் இருந்து ஊர்வலமாக அழைத்து வரும் நிகழ்ச்சி நடக்கிறது.

நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும், மாலை 6.30 மணிக்கு பிச்சாண்டவர் மூர்த்தி வெள்ளை சாத்தி புறப்பாடும், இரவு 10 மணிக்கு புனிதவதியாரும், பரமதத்த செட்டியாரும், முத்து சிவிகையில் வீதியுலா செல்லும் நிகழ்ச்சியும் நடக்கிறது. 15-ந் தேதி மாலை பிச்சாண்டவர் மூர்த்தி மற்றும் பஞ்சமூர்த்திகளுக்கு மகா அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 16-ந் தேதி (செவ்வாய்க் கிழமை) காலை 6 மணிக்கு பரமசிவன் அடியார் கோலத்துடன் பவளக்கால் விமானத்தில் அமர்ந்து வீதியுலா நடக்கிறது. அப்போது பக்தர்கள் மாங்கனிகளை வாரி இறைத்து தங்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றுவார்கள். மாலை 6 மணிக்கு அமுதுபடையல் நிகழ்ச்சி நடக்கிறது. இதனை தொடர்ந்து 17-ந் தேதி அதிகாலை 5 மணிக்கு அம்மையாருக்கு இறைவன் காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. விழாவையொட்டி பாரதி வீதியில் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

விழாவில் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது.

பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குவது, மாங்கனி விற்பனை குறித்து உணவு பாதுகாப்பு அதிகாரிகளை கண்காணித்து, ஆலோசனை கூறி வருகின்றனர். விழா ஏற்பாடுகளை மாவட்ட கலெக் டர் விக்ராந்த் ராஜா, கோவில் நிர்வாக அதிகாரி சுந்தர் ஆகியோர் ஆலோசனையின் பேரில் அறங்காவலர் குழு தலைவர் கேசவன் மற்றும் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News