ஆன்மிகம்
மாரியம்மன் கோவிலுக்கு பக்தர்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக வந்த போது எடுத்தபடம்.

திருப்பூர் கஞ்சம்பாளையம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நாளை நடக்கிறது

Published On 2019-07-10 06:31 GMT   |   Update On 2019-07-10 06:31 GMT
திருப்பூரில் 100 ஆண்டு கால பழமை வாய்ந்த கஞ்சம்பாளையம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நாளை நடக்கிறது.
திருப்பூர் கஞ்சம்பாளையத்தில் 100 ஆண்டு கால பழமை வாய்ந்த செல்வ விநாயகர், மாரியம்மன் கோவில் உள்ளது. நாகர், அம்பாள் உள்ளிட்ட தெய்வங்கள் ஒரே வளாகத்தில் அமைந்துள்ள இந்த கோவிலை புனரமைத்து கும்பாபிஷேகம் நடத்த கோவில் திருப்பணிக்குழு சார்பில் முடிவு செய்யப்பட்டது. இதற்கான அனைத்து பணிகளும் நிறைவடைந்தது.

இதைத்தொடர்ந்து நாளை (வியாழக்கிழமை) காலை கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது. இதையொட்டி நேற்று காலை விக்னே‌‌ஷ்வர பூஜையுடன் விழா தொடங்கியது. பின்னர் மகா கணபதி ஹோமம், யாகசாலை அலங்காரம், தீபாராதனை உள்ளிட்ட பூஜைகள் நடத்தப்பட்டன. மாலை 3 மணிக்கு முளைப்பாரி மற்றும் தீர்த்தக்குட ஊர்வலம் நடந்தது. இந்த ஊர்வலம் பாரதி நகர் கருப்பராயன் கோவிலில் இருந்து மகா மாரியம்மன் கோவிலை வந்தடைந்தது. இதில் கலந்துகொண்ட ஏராளமான பெண்கள் மற்றும் குழந்தைகள் ராமேசுவரம், அவினாசி, பவானி ஆகிய புனித ஸ்தலங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீரை தீர்த்தகுடங்களில் ஏந்தி தலையில் சுமந்தபடி வந்தனர்.

இன்று (புதன்கிழமை) காலை 2-ம் கால யாக பூஜையும், மாலையில் 3-ம் கால யாக பூஜையும் நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கும்பாபிஷேக விழா நாளை அதிகாலை 4-ம் கால யாக பூஜையுடன் தொடங்குகிறது. இதைத்தொடர்ந்து மகாபூர்ணாஹூதி, கலசங்கள் புறப்பாடு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. காலை 9.30 மணிக்கு மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் அர்ச்சகரும், திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சாமி கோவில் 2-ம் ஸ்தானிகருமான ராஜாபட்டர் தலைமையில் செல்வ விநாயகர், மகா மாரியம்மன் கோவில் விமான கோபுரங்களில் புனிதநீர் ஊற்றப்பட்டு மூலாலய கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

இதைத்தொடர்ந்து விழாவில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. விழாவையொட்டி அந்தபகுதி முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது. விழா ஏற்பாடுகளை விழாக்கமிட்டியினர், கோவில் திருப்பணிக்குழு மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News