ஆன்மிகம்
ராஜவல்லிபுரம் செப்பறை அழகிய கூத்தர் கோவில் தேரோட்டம் நடந்தபோது எடுத்த படம்.

செப்பறை அழகிய கூத்தர் கோவில் தேரோட்டம்

Published On 2019-07-08 04:36 GMT   |   Update On 2019-07-08 04:36 GMT
நெல்லை ராஜவல்லிபுரம் செப்பறை அழகிய கூத்தர் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.
நெல்லை ராஜவல்லிபுரத்தில் தாமிரபரணி ஆற்றையொட்டி செப்பறை அழகிய கூத்தர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆனி மாதம் திருவிழா விமரிசையாக நடைபெறும்.

இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றது. 14-ந்தேதி அழகியகூத்தருக்கு திருவாதிரை அபிஷேகம் நடைபெற்றது. 5-ந்தேதி காலை 10 மணிக்கு அழகியகூத்தர் விழா மண்டபத்துக்கு எழுந்தருளினார். இரவு 7 மணிக்கு சிவப்பு சாத்தியும், நேற்று முன்தினம் காலை 10 மணிக்கு வெள்ளை சாத்தியும், மாலை 6 மணிக்கு பச்சை சாத்தியும் சுவாமி காட்சி அளித்தார்.

திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடைபெற்றது. காலை 11.30 மணிக்கு சுவாமி தேருக்கு எழுந்தருளியதை தொடர்ந்து தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் 4 ரதவீதிகளிலும் சென்று மீண்டும் நிலையை அடைந்தது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இன்று (திங்கட்கிழமை) காலை 11 மணிக்கு மகா அபிஷேகமும், மதியம் 1 மணிக்கு சுவாமிக்கு நடன தீபாராதனையும், தொடர்ந்து சுவாமி வீதி உலாவும் நடக்கிறது. இரவு 7 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது. இரவு 8 மணிக்கு சுவாமி அழகிய கூத்தர் தாமிரசபைக்கு எழுந்தருளுகிறார். விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் முருகானந்தம், செயல் அலுவலர் அய்யர் சிவமணி மற்றும் கோவில் பணியாளர்கள், ஊர் மக்கள் செய்திருந்தனர்.
Tags:    

Similar News