ஆன்மிகம்

அகத்தியரின் சக்தியை உணர்ந்த அசுரர்கள்

Published On 2019-06-25 04:38 GMT   |   Update On 2019-06-25 04:38 GMT
விந்திய மலைப் பகுதியில் வாழ்ந்து வந்த வாதாபி, இல்வலன் என்ற இரண்டு அசுரர்கள் அகத்தியரின் சக்தியை உணர்ந்து கொண்ட கதையை விரிவாக அறிந்து கொள்ளலாம்.
விந்திய மலைப் பகுதியில் வாதாபி, இல்வலன் என்ற இரண்டு அசுரர்கள் வாழ்ந்து வந்தனர். அவர்கள் அந்தப் பக்கமாக வரும் சாதுக்களை தங்கள் இல்லத்திற்கு விருந்துண்ண அழைப்பார்கள்.

அவர்களை நம்பி வீட்டிற்கு வரும் விருந்தினருக்கு உணவு பரிமாறுவார்கள். அது எப்படிப்பட்டது என்றால், வாதாபியை ஆடாக மாறச் செய்து அதைச் சமைத்து சாதுவுக்கு பரிமாறுவான் இல்வலன். சாது உணவருந்தி முடித்ததும், “வாதாபியே வெளியே வா” என்று இல்வலன் அழைப்பான். உடனே வாதாபி, அந்த சாதுவின் வயிற்றைக் கிழித்துக் கொண்டு வெளியே வருவான். வயிறு கிழந்து இறந்த சாதுவின் உடலை அசுரர்கள் இருவரும் தின்று பசியாறுவார்கள்.

இது அசுரர்களின் வழக்கமாக இருந்தது. ஒரு முறை அகத்திய முனிவர் அவர்களின் இருப்பிடம் பக்கமாக சென்றார். அவரை இல்வலன் தன்னுடைய இல்லத்திற்கு வந்து உணவருந்த வேண்டும் என்று அழைத்தான். அவனை பார்த்த உடனேயே அவனது எண்ணங்களை புரிந்து கொண்ட அகத்தியர், உணவருந்த சம்மதித்து அவனுடன் சென்றார்.

ஏற்கனவே இல்வலன், வாதாபியை ஆடாக மாற்றி சமைத்து வைத்திருந்த உணவை, அகத்தியருக்கு பரிமாறினான். அதை முழுவதுமாக சாப்பிட்டு முடித்த அகத்தியர், “வாதாபி! ஜீரணமாகிப் போவாய்” என்று வயிற்றைத் தடவினார். வாதாபி, அகத்தியரின் வயிற்றிலேயே ஜீரணமாகிப் போனான். இதை அறியாத இல்வலன், “வாதாபியே வெளியே வா” என்று பலமுறை அழைத்தும், வாதாபி வெளியே வரவில்லை. அகத்தியரின் சக்தியை உணர்ந்த அவன், அவரது பாதம் பணிந்து மன்னிப்பு கேட்டான்.
Tags:    

Similar News