ஆன்மிகம்
பஞ்சமுக ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள் பாலித்த காட்சி.

பஞ்சவடி பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம்

Published On 2019-06-24 03:02 GMT   |   Update On 2019-06-24 03:02 GMT
புதுச்சேரி அருகே பஞ்சவடியில் உள்ள பிரசித்தி பெற்ற பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
புதுச்சேரி-திண்டிவனம் சாலையில் அமைந்துள்ள பஞ்சவடி ஆஞ்சநேயர் கோவிலில் ஆஞ்சநேயர், விநாயகர், புதிதாக 7½ அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள பட்டாபிஷேக ராமச்சந்திரமூர்த்தி, ஸ்ரீவாரி வெங்கடாஜலபதி சன்னதியில் உள்ள விமானங்கள் மற்றும் 5 நிலை ராஜகோபுரம் ஆகியவற்றுக்கு கும்பாபிஷேகம் நேற்று காலை நடந்தது.

விழாவினையொட்டி 20 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் 38 ஹோம குண்டங்களுடன் பிரமாண்டமான யாகசாலை அமைக்கப்பட்டது. கடந்த 17-ந் தேதி காலை 9 மணி முதல் ஹோமம் மற்றும் பூஜைகள் தொடங்கி நடந்து வந்தன.

விழாவில் முக்கிய நிகழ்வான மகா கும்பாபிஷேகம் நேற்று காலை 9 மணி முதல் 10.30 மணிக்குள் நடந்தது. இதற்காக கங்கை, கோதாவரி, நர்மதை, கிருஷ்ணா, காவிரி, தாமிரபரணி, பாலாறு, துங்கபத்ரா போன்ற புண்ணிய நதிகளில் இருந்தும், தமிழகத்தில் உள்ள வைணவ மற்றும் சைவ கோவில் களில் உள்ள தெப்பக்குளங்களில் இருந்தும் புனித நீர் கொண்டு வரப்பட்டு இருந்தது.

தொடர்ந்து மூலவர் ஆஞ்சநேயர், விநாயகர், புதிதாக 7½ அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள பட்டாபிஷேக ராமச்சந்திரமூர்த்தி, ஸ்ரீவாரி வெங்கடாஜலபதி சன்னதியில் உள்ள விமானங்கள் மற்றும் 5 நிலை ராஜகோபுரம் மீது புனிதநீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடந்தது. வெங்கடேச பட்டாச்சாரியார் தலைமையில் பட்டாச்சாரியார்கள், சிவாச்சாரியார்கள் இணைந்து கும்பாபிஷேக விழாவை நடத்தினர்.



கும்பாபிஷேகத்தை காண லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து குவிந்து இருந்தனர். கோபுரக்கலசத்தின் மீது புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்ததை பக்தர்கள் கண்டு தரிசித்தனர். அப்போது அவர்கள் ஜெய் ஜெய் ராமா, ஜெய் ஆஞ்சநேயா என பக்தி கோஷம் எழுப்பினர். கும்பாபிஷேகம் முடிந்ததும் நவீன நீர் தெளிப்பான் கருவிகள் மூலம் பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது.

கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு நேற்று காலை முதல் மாலை வரை இடைவிடாமல் அன்னதானம் வழங்கப்பட்டது.. மேலும் திருமலை, திருப்பதி போல் லட்டு பிரசாதமும் வழங்கப்பட்டது.

விழாவையொட்டி நேற்று மாலை 6 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி, சீனிவாசபெருமாள் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இன்று (திங்கட்கிழமை) முதல் மண்டலாபிஷேக பூஜைகள் நடத்தப்பட உள்ளன.
Tags:    

Similar News