ஆன்மிகம்

பண்பொழி திருமலைக்குமார சுவாமி கோவிலில் கும்பாபிஷேகம்

Published On 2019-06-15 04:01 GMT   |   Update On 2019-06-15 04:01 GMT
பண்பொழி திருமலைக்குமார சுவாமி கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
நெல்லை மாவட்டம் தென்காசி அருகே உள்ள பண்பொழியில் பிரசித்தி பெற்ற திருமலைக்குமார சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் புதிதாக 5 நிலை கொண்ட ராஜகோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் பணிகள் முடிவடைந்து நேற்று கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடந்தது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 9-ம் தேதி முதல் பூஜைகள் நடந்தது.

11-ம் தேதி முதல் யாகசாலை பூஜைகள் நடந்தது. நேற்று அதிகாலை 4.30 மணிக்கு 6-ம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து பரிவார மூர்த்திகள் யாகசாலை பூஜை, பூர்ணாஹூதி, நாடி சந்தானம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடந்தது.

பின்னர் யாத்ரா தானம், கடம் எழுந்தருளலை தொடர்ந்து காலை 9.45 மணிக்கு ராஜகோபுரம், விமானங்களுக்கு சிவாச்சாரியார்கள் புனித நீர் ஊற்றினர். அப்போது பலத்த மழை பெய்தது. பக்தர்கள் முருகனுக்கு அரோகரா என்று பக்தி கோஷங்கள் முழங்கினர். முன்னதாக சிவாச்சாரியார்கள் பஞ்ச வாத்தியங்களுடன் பக்தி கோஷமிட்டு ஊர்வலமாக வந்தனர்.

மதியம் மூலவர் மற்றும் பரிவார தேவதைகளுக்கு மகா அபிஷேகம், அலங்கார தீபாராதனைகள் நடந்தது. மாலையில் தங்கத் தேர் உலா நடைபெற்றது. இரவு 9 மணிக்கு நகரீஸ்வரமுடையார் கோவிலில் வைத்து சண்முகர், வள்ளி, தெய்வானை திருக்கல்யாண வைபவம் மற்றும் ரத வீதி உலா நடைபெற்றது.

கும்பாபிஷேக விழாவில் அமைச்சர் ராஜலட்சுமி, மனோகரன் எம்.எல்.ஏ, மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா, மாவட்ட பொருளாளர் சண்முகசுந்தரம், செங்கோட்டை நகர செயலாளர் குட்டியப்பா என்ற கிருஷ்ணமுரளி மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை நெல்லை இணை ஆணையர் பரஞ்சோதி, தக்கார் செல்லத்துரை, கோவில் உதவி ஆணையர் அருணாசலம், ராஜகோபுர மற்றும் கும்பாபிஷேக உபயதாரர்கள் கடையநல்லூர் அருணாச்சலம், பரமேஸ்வரி அருணாச்சலம் ஆகியோர் செய்திருந்தனர்.

விழாவை முன்னிட்டு கோவிலின் அடிவார பகுதியில் இருந்து பக்தர்கள் வேன்களில் இலவசமாக கோவிலுக்கு அழைத்து செல்லப்பட்டனர். நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் சக்திகுமார் உத்தரவின் பேரில் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மதியம் வண்டாடும் பொட்டல் பகுதியில் அன்னதானம் நடைபெற்றது.
Tags:    

Similar News