ஆன்மிகம்

திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவில் தேரோட்டம்

Published On 2019-06-15 03:13 GMT   |   Update On 2019-06-15 03:13 GMT
திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
பண்ருட்டி திருவதிகையில் பிரசித்தி பெற்ற பெரிய நாயகி உடனுறை வீரட்டானேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் வைகாசி மாதம் பிரம்மோற்சவம் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவம் கடந்த 6-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை தொடர்ந்து தினசரி சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று, பஞ்ச மூர்த்திகள் யானை, குதிரை, மயில் உள்ளிட்ட வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடைபெற்று வந்தது.

விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று காலை வெகுவிமரிசையாக நடந்தது. இதையொட்டி தல நாயகராக விளங்கும் திரிபுரசம்கார மூர்த்தி மற்றும் பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

பின்னர் அலங்கரித்து நிறுத்தப்பட்டிருந்த தேரில் திரிபுரசம்கார மூர்த்தி, பெரியநாயகி அம்மன் ஆகியோர் ஒரு தேரிலும், மற்றொரு தேரில் விநாயகர், முருகன், சண்டிகேஸ்வரர் ஆகியோரும் எழுந்தருளினர். இதைத்தொடர்ந்து அங்கு திரண்டிருந்த பக்தர்கள் சிவ, சிவ, சிவாய நம என்று சிவகோஷம் எழுப்பி 2 தேர்களையும் வடம் பிடித்து இழுத்தனர். திரிபுரசம்கார மூர்த்தி, விநாயகர் தேர்கள் கோவிலை சுற்றி கிரிவலப்பாதையில் வலம் வந்து மீண்டும் நிலையை வந்தடைந்தது.

இதில் முன்னாள் நகரசபை தலைவர் பன்னீர்செல்வம், இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் ஜெயசித்ரா, செயல் அலுவலர் நாகராஜன், முன்னாள் ஒன்றியக்குழு துணை தலைவர் சம்பந்தம், கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் ரமேசின் மனைவி உஷாரமேஷ் மற்றும் வியாபார பிரமுகர்கள், அரசியல் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து இரவு 7 மணிக்கு திரிபுரசம்கார மூர்த்தி தேரிலும், சரநாராயண பெருமாள் கருட வாகனத்திலும் எழுந்தருளி 3 அரக்கர்களை எரிக்கும் ஐதீக நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

முன்னதாக அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நிகழாமல் தடுக்கும் வகையில் பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு நாகராஜன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். விழாவில் இன்று(சனிக்கிழமை) நடராஜர் உற்சவமும், தீர்த்தவாரியும் நடைபெறுகிறது, மாலையில் மஞ்சள் நீர் உற்சவமும் நடைபெற உள்ளது.
Tags:    

Similar News