ஆன்மிகம்

திருக்காமீஸ்வரர் கோவில் தேரோட்டம்

Published On 2019-06-14 05:34 GMT   |   Update On 2019-06-14 05:34 GMT
வில்லியனூரில் பிரசித்தி பெற்ற திருக்காமீஸ்வரர் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி மாநிலம் வில்லியனூரில் மிகவும் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற திருக்காமீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் வைகாசி மாதம் திருவிழா மிக விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு கடந்த 5-ந் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது.

இதையொட்டி தினமும் சாமிக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகங்களுடன் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தினமும் இரவில் சாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று காலை 8 மணி அளவில் நடைபெற்றது. விழாவில் கவர்னர் கிரண்பெடி முதல்-அமைச்சர் நாராயணசாமி அமைச்சர்கள் நமச்சிவாயம் கந்தசாமி சபாநாயகர் சிவக்கொழுந்து வைத்திலிங்கம் எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்கள் பாலன் தீப்பாய்ந்தான் சுகுமாறன் ஆகியோர் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.

முதலில் விநாயகர் தேர் இழுத்து செல்லப்பட்டது. அதன்பின் திருக்காமீஸ்வரர் அம்மன் ஆகிய தேர்கள் இழுத்துச் செல்லப்பட்டன. காலை 8 மணி அளவில் தொடங்கிய தேரோட்டம் கோவிலின் 4 மாட வீதிகளிலும் வலம் வந்து பகல் 1 மணி அளவில் நிலைக்கு வந்தது.

இந்த தேர் திருவிழாவில் வில்லியனூர் பகுதி மக்கள் மட்டுமல்லாமல் புதுச்சேரி கடலூர் விழுப்புரம் ஆகிய ஊர்களில் இருந்தும் சுற்று வட்டார கிராமங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News