ஆன்மிகம்

ஆன்மிக அரிய தகவல்கள்

Published On 2019-06-13 06:27 GMT   |   Update On 2019-06-13 06:27 GMT
இந்து சமயத்தில் வழிபாடு முக்கிய பங்கு வகிக்கிறது. வழிபாட்டு முறையில் உள்ள சில முக்கியமாக அரிய தகவல்களை விரிவாக அறிந்து கொள்ளலாம்.
மகாலட்சுமி யோகம்

யோகங்களில் எத்தனை யோகம் உண்டு. அவற்றில் மகாலட்சுமி யோகம், அஷ்டலட்சுமி யோகம் போன்றவை ஜாதகத்தில் இடம் பெற்றால் புகழ் பெற்ற உலகச் செல்வந்தர்களில் ஒருவராக விளங்கலாம்.

குறிப்பாக லக்னத்திற்கு யோகம் செய்யும் கிரகம் தன ஸ்தானத்தில் வீற்றிருந்தால் மகாலட்சுமி யோகம் உருவாகும். அதேநேரத்தில் சந்திர ராசிக்கு லாப ஸ்தானத்தில் யோககாரகன் வீற்றிருந்தால், உலகப் புகழ்மிக்கவராகவும், கோடீஸ்வரராகும் யோகம் பெற்றவராகவும் விளங்குவர்.

உலகம் முழுவதும் விநாயகர்

கிரேக்க நாட்டில் மைல் கல் உருவத்திலும், ஜாவாவில் ஆற்றங்கரையிலும், கலிபோர்னியாவில் பத்மாசனத்திலும், சயாமில் பெருச்சாளி வாகனத்தின் மீதும் விநாயகர் காட்சியளிக்கிறார். திபெத் மக்கள், இவ்சர் தேவியின் உருவத்தில் விநாயகரை வழிபடுகிறார்கள். அமெரிக்கப் பழங்குடிகள் சிலர், அறுவடை கால தெய்வமாக விநாயகப் பெருமாளை வணங்குகிறார்கள்.''

குகக்கோட்டம்

முருகப்பெருமான் தன்னுடைய பக்தர்களின் ஆணவத்தை அழிப்பவர். எனவே அவர் ‘குகன்’ எனப் போற்றப் படுகிறார். தமிழ்நாட்டில் முருகனுக்கு கந்தக்கோட்டம், குமரக்கோட்டம், குகக்கோட்டம் என மூன்று கோட்டங்கள் உள்ளன. திருக்கழுக்குன்றம் திருத்தலமே குகக் கோட்டம் என்று அழைக்கப்படுகிறது.

அபூர்வ நரசிம்மர்

நாகப்பட்டினத்தில் உள்ள ஒரு திவ்ய தேசத்தில் அட்டபுய நரசிம்மர் காட்சியளிக்கிறார். இவரது ஒரு கரம் இரணியனை அழிப்பது போன்றும், மற்றொரு கரம் பிரகலாதனுக்கு அருள்வது போன்றும் ஒரே சமயத்தில் செய்வதாக அமைந்துள்ளது. இது எங்கும் காணாத காட்சியாகும்.

தீபாராதனை

தெய்வங்களுக்கு காட்டப்படும் கற்பூர தீபம், ஞானச் சுடர் என்று அழைக்கப்படுகிறது. அந்த தீபத்தை மூன்றுமுறை சுற்றிக் காட்டுதல் வேண்டும் என்பது ஆகமவிதி. முதல் முறை உலக நன்மைக்காகவும், இரண்டாவது முறை ஊர் நன்மைக்காகவும், மூன்றாவது முறை உயிர்களின் நன்மைக்காகவும் தீபம் சுற்றிக் காட்டப்படுகிறது.

மூன்றுமுக வழிபாடு

திருவக்கரை கருவறை லிங்கம், கிழக்கே தத்புருஷ முகம், வடக்கே வாமதேவ முகம், தெற்கே அகோர முகம் என மூன்று முகங்களாக அமையப்பெற்றுள்ளது. அதிகாலையில் தத்புருஷ முகத்தை மஞ்சள் பூசியும், உச்சிக் காலத்தில் வாமதேவ முகத்தை சந்தனம் சாத்தியும், மாலையில் அகோர முகத்தை குங்குமம் அணிவித்தும் வணங்கினால் அம்மையப்பரின் அருள்கிட்டும்.

தொகுப்பு: நெ.ராமன்.
Tags:    

Similar News