ஆன்மிகம்

பட்டத்தரசியம்மன் கோவிலில் திருக்கல்யாணம்

Published On 2019-06-13 04:18 GMT   |   Update On 2019-06-13 04:18 GMT
ஆவாரம்பாளையத்தில் உள்ள பட்டத்தரசியம்மன் கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கோவை ஆவாரம்பாளையத்தில் உள்ள பட்டத்தரசியம்மன் கோவிலின் 127-ம் ஆண்டு வைகாசி திருவிழா கடந்த 3-ந் தேதி முதல் முனியப்பன் கருப்பராயர் பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதைத் தொடர்ந்து கம்பம் சாட்டு விழா, 108 தீர்த்த குடங்கள், சக்தி கரகம் மற்றும் திருவிளக்கு பூஜைகள் நடைபெற்றன. விழாவில் கோவை காமாட்சிபுரி ஆதினம் சிவலிங்கேசுவர சுவாமிகள் கலந்து கொண்டு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்தார்.

இதையடுத்து நேற்று முன்தினம் அம்மன் நகை எடுத்தல் மற்றும் அம்மனை அழைத்து வருதல் நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று காலை விழாவின் சிகர நிகழ்ச்சியாக அம்மனுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. முன்னதாக அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், பூஜைகள் செய்யப்பட்டன.

இதன் பின்னர் பக்தர்கள் அலகு குத்தியும், பறவைக்காவடி எடுத்தும் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். உடலெங்கும் அலகு குத்திய பக்தர்கள், பறவைக்காவடியுடன் வந்த பக்தர்கள் ஆவாரம்பாளையம் மற்றும் பஸ் நிலையத்திலிருந்து கோவில் வரை ஊர்வலமாக வந்தனர். இதையடுத்து பெண்கள் பூச்சட்டி எடுத்தும், ஆண்கள் கரகம் எடுத்தும் நடனமாடியபடி வந்தனர்.

விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அவர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் தலைவர் செல்வராஜ், செயலாளர் தம்புராஜ், பொருளாளர் செல்வராஜ், நிர்வாகிகள் ரங்கசாமி, சரவணன் மற்றும் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News