ஆன்மிகம்
சுவாமி-அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தபோது எடுத்த படம்

கைலாசநாதர் கோவிலில் சுவாமி-அம்பாள் வீதிஉலா

Published On 2019-06-12 06:03 GMT   |   Update On 2019-06-12 06:03 GMT
நெல்லை கைலாசநாதர் கோவிலில் வைகாசி திருவிழாவையொட்டி சுவாமி-அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்தில் வீதி உலா சென்றனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
நெல்லை சந்திப்பு கைலாசபுரத்தில் கைலாசநாதர்-சவுந்திரவள்ளி அம்பாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகாசி திருவிழா 10 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த 2-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழா நாட்களில் சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனையும், இரவில் சுவாமி-அம்பாள் வீதி உலாவும் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று முன்தினம் நடந்தது.

இதைத்தொடர்ந்து நேற்று காலை 7 மணிக்கு யாகசாலை பூஜையும், கைலாசநாதர்-சவுந்திரவள்ளி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனையும் நடந்தது. காலை 8 மணிக்கு சுவாமி-அம்மாள், அஸ்திரதேவர் மேளதாளம் முழங்க கோவிலில் இருந்து தாமிரபரணி ஆற்றின் தைப்பூச மண்டப படித்துறைக்கு எழுந்தருளினர். அங்கு சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரமும், அஸ்திரதேவருக்கு தீர்த்தவாரியும் நடந்தது.

இதைத்தொடர்ந்து காலை 10 மணிக்கு கைலாசநாதர்-சவுந்திரவள்ளி அம்பாள் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி ரிஷப வாகனத்தில் வீதிஉலா சென்றனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இரவில் கொடியிறக்கம் நடந்தது.  
Tags:    

Similar News