ஆன்மிகம்
பெண்கள் மட்டும் வடம் பிடித்து இழுத்தனர்முத்துமாரியம்மன் கோவில் தேரை பெண்கள் மட்டும் இழுத்த போது எடுத்த படம்.

திட்டக்குடி அருகே முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம்

Published On 2019-06-10 03:36 GMT   |   Update On 2019-06-10 03:36 GMT
திட்டக்குடி அருகே முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் பெண்கள் மட்டும் தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர்.
திட்டக்குடி அருகே பெருமுளை கிராமத்தில் பழமை வாய்ந்த முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டுக்கான விழா கடந்த 26-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து தினந்தோறும் முத்துமாரியம்மனுக்கும் மற்றும் கோவில் வளாகத்தில் உள்ள காத்தவராயன் சாமிக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்து வந்தன.

மேலும் சுமங்கலி பெண்கள் உலக நன்மை வேண்டி பொங்கலிட்டு சாமிக்கு படையல் போட்டு சிறப்பு வழிபாடு நடத்தினர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்திருவிழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி காலை 6 மணிக்கு அம்மனுக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தனம், தேன் உள்பட பல்வேறு வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் நடத்தப்பட்டது.

பின்னர் சிறப்பு பூஜை செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து 10 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேரில் முத்துமாரியம்மன் எழுந்தருளினார். அதனை தொடர்ந்து அங்கிருந்த திரளான பெண்கள் மட்டும் தேரை வடம்பிடித்து இழுத்தனர். அப்போது ஆங்காங்கே பக்தர்கள் தேரை வரவேற்று தேங்காய் உடைத்து சாமி தரிசனம் செய்தனர்.

தேரானது முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் நிலையை வந்தடைந்தது. மேலும் விழாவில் கரகாட்டம், மயிலாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் கிராமத்தின் முக்கிய தலைவர்கள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் பொது மக்கள் செய்திருந்தனர். 
Tags:    

Similar News