ஆன்மிகம்
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் தங்கத்தேர் மராமத்து பணி நடைபெற்ற போது எடுத்தபடம்.

திருப்பரங்குன்றம் கோவிலில் தங்கத்தேர் மராமத்து பணி

Published On 2019-06-08 06:09 GMT   |   Update On 2019-06-08 06:09 GMT
திருப்பரங்குன்றம் கோவிலில் பழுதாகி கடந்த 1½ ஆண்டுகளுக்கு மேலாக ஒரு அறைக்குள் முடங்கிய தங்கத்தேரின் மராமத்து செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் பக்தர்களின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று கடந்த 2007-ம் ஆண்டு 11 அடி உயரத்தில் புதிதாக தங்கத்தேர் செய்யப்பட்டது. அதில் 11 கிலோ தங்கம், 22 கிலோ வெள்ளி, 450 கிராம் தாமிரம் சேர்க்கப்பட்டது. இந்த தேர் 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்கு முன்பு வரை கம்பீரமாக திருவாட்சி மண்டபத்தில் வலம் வந்தது. பக்தர்கள் தங்களது பிறந்தநாள் மற்றும் திருமண நாளில் கோவிலுக்குள் தங்கத்தேர் இழுத்து முருகப்பெருமானை வழிபட்டனர். இதேபோல் அரசியல் கட்சியினர் தங்களது தலைவர்களின் பிறந்தநாளில் தங்கத்தேரை இழுத்தனர். தங்கத்தேர் இழுத்து தரிசனம் செய்ய கட்டணமாக ரூ.2 ஆயிரம் வசூலிக்கப்பட்டது. இதனால் கோவிலுக்கு கணிசமான வருமானமும் கிடைத்தது.

இதற்கிடையே கடந்த 1½ ஆண்டுக்கு முன்பு தேரில் உள்ள சில பொம்மைகள் மற்றும் சக்கரங்கள் தேய்மானம் ஏற்பட்டு பழுதானதாக கூறப்பட்டது. மேலும் தேரில் பொருத்தப்பட்ட ஒளி மிளிரும் விளக்குகள் ஒளிரவில்லை. இதனையடுத்து தேர் ஓடுவது நிறுத்தப்பட்டது. மேலும் தங்கத்தேர் நிறுத்துவதற்காக உருவாக்கப்பட்ட தனி அறையில் நிறுத்தி பாதுகாப்பாக வைக்கப்பட்டது. இதனால் தங்கத்தேரை பழுது நீக்கி மீண்டும் இயக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் சில காரணங்களால் தங்கத்தேர் மராமத்து பணி நடைபெறுவதில் சிக்கல் இருந்துவந்தது.

இந்தநிலையில் இந்து அமைப்புகள், பக்தர்கள் மற்றும் உள்ளூர் பிரமுகர்கள் பலர் தங்கத்தேரினை மராமத்து பணி செய்து இயக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அதன் பயனாக மராமத்து பணி செய்ய, அதற்குரிய செலவு தொகையை தாங்கள் ஏற்பதாக உபயதாரர்கள் பலர் போட்டி போட்டு முன்வந்தனர். இதனையடுத்து 2 முறை மராமத்து பணி செய்ய நாட்கள் குறிக்கப்பட்டது. ஆனால் துணை கமிஷனர் (பொறுப்பு) ஒத்துழைக்கவில்லை. எனவே 2 முறையும் மராமத்து பணி செய்யப்படாத நிலை ஏற்பட்டது.

இதற்கிடையே நேற்று திண்டுக்கல் உதவி ஆணையர் சிவலிங்கம், அழகர்கோவில் துணை ஆணையர் மாரிமுத்து ஆகியோர் முன்னிலையில் நகை மதிப்பீட்டு வல்லுனர் ராஜேசுவரன், வைர நுண்ணறிவு பிரிவு அதிகாரி ஜீவானந்தம், துணை ஆணையரின் நேர்முக உதவியாளர் மணிமாறன், கோவில் பேஷ்கார் நெடுஞ்செழியன் மணியம் புகழேந்தி, கோவில் ஸ்தானிக பட்டர்கள் ஆகியோர் மேற்பார்வையில் சுவாமிமலை ஸ்தபதி கண்ணன் மராமத்து பணியில் ஈடுபட்டார். மராமத்து பணி இன்று (சனிக் கிழமை) முழுவதும் நடைபெறும் என்று தெரிகிறது. நாளை மறுநாள் தங்கத்தேர் வெள்ளோட்டம் நடைபெற்று, அடுத்த வாரம் தங்கத்தேர் கோவிலில் வலம் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:    

Similar News