ஆன்மிகம்
திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் பெரியநாயகி அம்மன் தேர் வெள்ளோட்டம் நடந்த போது எடுத்த படம்

திருவதிகை பெரியநாயகி அம்மன் தேர் வெள்ளோட்டம்

Published On 2019-06-06 04:22 GMT   |   Update On 2019-06-06 04:22 GMT
திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் பெரியநாயகி அம்மன் தேர் வெள்ளோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
பண்ருட்டி திருவதிகையில் உள்ள பிரசித்தி பெற்ற வீரட்டானேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பிரம்மோற்சவத்தின் போது தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். இதில் வீரட்டா னேஸ்வரர், பெரியநாயகி அம்மன் ஆகியோர் தனித்தனி தேரில் எழுந்தருளி மாடவீதிகளில் உலா வருவார்கள்.

ஆனால் கடந்த சில ஆண்டுகளாக அம்மன் தேர் சேதமடைந்து காணப்பட்டது. இதனால் வீரட்டானேஸ்வரர் தேர் மட்டும் பக்தர்கள் மத்தியில் வலம் வந்த படி உள்ளது. இதைத்தொடர்ந்து அம்மனுக்கென தனியாக புதிய தேர் செய்ய வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை வைத்து வந்தனர்.

இதையடுத்து, புதிய தேர் செய்ய, மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா ரூ.10 லட்சம் நிதியை ஒதுக்கீடு செய்தார். அதைத்தொடர்ந்து பொதுமக்களிடம் இருந்து நன்கொடையாக ரூ.10 லட்சம் பெறப்பட்டு, மொத்தம் ரூ.20 லட்சத்தில் தேர் செய்யும் பணி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. முழு வீச்சில் நடந்து வந்த பணிகள் நிறைவு பெற்றதால், இந்த ஆண்டு பிரம்மோற்சவ விழாவில் அம்மன் தேரும் வலம் வர ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

இதன் முன்னோட்டமாக பெரியநாயகி அம்மன் தேர் வெள்ளோட்டம் நேற்று நடந்தது. முன்னதாக வீரட்டானேஸ்வரர், பெரியநாயகி அம்மனுக்கும், பின்னர் புதிய தேருக்கும் சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து பெரியநாயகி அம்மன் தேர் வெள்ளோட்டம் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் நாகராஜன், ஆய்வாளர் ஜெயசித்ரா ஆகியோர் செய்திருந்தனர்.

தொடர்ந்து ஆண்டுதோறும் நடைபெறும் பிரம்மோற்சவம் இன்று (வியாழக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 14-ந்தேதி நடக்கிறது.
Tags:    

Similar News