ஆன்மிகம்

காரைக்கால் அம்மையார் மாங்கனித் திருவிழா 5 நாட்களாக நீட்டிப்பு

Published On 2019-06-05 06:04 GMT   |   Update On 2019-06-05 06:04 GMT
காரைக்கால் அம்மையார் மாங்கனித் திருவிழா 5 நாட்களாக நீடிக்கப்பட்டு உள்ளது என கோவில் அறங்காவல் குழு அறிவித்துள்ளது.
காரைக்கால் கைலாசநாதர் கோவில் அறங்காவலர் குழு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

காரைக்கால் அம்மையார் மாங்கனித் திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இவ்விழாவை காண ஒவ்வொரு ஆண்டும் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து வருகிறது.

எனவே பக்தர்களின் வசதிக்காகவும், விழாவில் சிவாச்சாரியார்களின் இடைவிடா பணிச் சுமையைக் குறைக்கவும், கடந்த ஆண்டு காரைக்கால் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற அரசுத்துறை அதிகாரிகள், சமாதானக்குழு உறுப்பினர்கள் மற்றும் கோவில் அறங்காவலர் குழுவினர் கலந்துகொண்ட கூட்டத்தில், 4 நாள் விழாவை 5 நாளாக நீடிப்பது குறித்து கருத்து தெரிவிக்கப்பட்டது. இதனை கலெக்டர் உள்ளிட்ட அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.

தொடர்ந்து, இந்த ஆண்டு நடைபெற்ற உபயதாரர்கள் கூட்டத்திலும் அதே கருத்து முன்வைக்கப்பட்டது. உபயதாரர்களும் ஆட்சேபனை இன்றி விழாவை 5 நாட்கள் நடத்தலாம் என்று ஒப்புகொண்டனர். தொடர்ந்து, வேத சிவகாம விதிகள் கற்றுத்தேர்ந்த சிவாச்சாரியார்களின் பூரண ஒப்புதலுடன், விழாவினை கூடுதலாக ஒருநாள் நீடிப்பது என முடிவெடுக்கப்பட்டு உள்ளது.

அதன்படி, இந்த ஆண்டு விழா வருகிற ஜூலை 13-ந் தேதி மாலை 6 மணிக்கு மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது. 14-ந் தேதி காலை 10.30 மணிக்கு திருக்கல்யாணமும், 15-ந் தேதி மாலை 4.30 மணிக்கு பிச்சாண்டவர் மற்றும் பஞ்சமூர்த்திகள் மகா அபிஷேகம் நடக்கிறது. 16-ந் தேதி காலை 6 மணிக்கு பிச்சாண்டவர் வீதிஉலா, பக்தர்கள் மாங்கனி இறைக்கும் நிகழ்ச்சி, அன்று மாலை அமுது படையல் வழங்கும் நிகழ்ச்சியும், 17-ந் தேதி அதிகாலை 5 மணிக்கு அம்மையாருக்கு இறைவன் காட்சி தரும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News