ஆன்மிகம்
புதிதாக செய்யப்பட்டுள்ள பெரியநாயகி அம்மன் தேரை படத்தில் காணலாம்.

திருவதிகை கோவில் பெரியநாயகி அம்மன் தேர் வெள்ளோட்டம் இன்று நடக்கிறது

Published On 2019-06-05 05:37 GMT   |   Update On 2019-06-05 05:37 GMT
திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் பெரியநாயகி அம்மனுக்கு புதிதாக செய்யப்பட்ட தேர் வெள்ளோட்டம் இன்று நடக்கிறது.
பண்ருட்டி திருவதிகையில் பிரசித்தி பெற்ற வீரட்டானேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பிரம்மோற்சவத்தின் போது தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். இதில் வீரட்டானேஸ்வர் மற்றும் பெரிய நாயகி அம்மன் ஆகியோர் தனித்தனி தேரில் எழுந்தருளி வீதிஉலா வருவார்கள்.

இந்த நிலையில் அம்மன் தேர் பழுதாகி சேதமடைந்து போனதால், கடந்த சில ஆண்டுகளாக வீரட்டானேஸ்வரர் தேர் மட்டும் பக்தர்கள் மத்தியில் வலம் வந்தபடி உள்ளது. இதை தொடர்ந்து அம்மனுக்கு தனியாக புதிய தேர் தயார் செய்ய வேண்டும் என்று பக்தர்களின் எதிர்பார்ப்பாக இருந்து வந்தது.

இதையடுத்து, புதிய தேர் செய்ய, மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா ரூ. 10 லட்சம் நிதியை ஒதுக்கீடு செய்தார். இதை தொடர்ந்து பொதுமக்கள் நன்கொடையாக ரூ. 10 லட்சம் பெறப்பட்டு, மொத்தம் ரூ. 20 லட்சத்தில் தேர் தயார் செய்யும் பணி 2 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. முழுவீச்சில் நடந்து வந்த பணிகள் நிறைவு பெற்றதால், இந்த ஆண்டு பிரம்மோற்சவ விழாவில் அம்மன் தேரும் வலம் வர தயாராகி விட்டது.

இதற்கு முன்னோட்டமாக இன்று(புதன்கிழமை) தேர் வெள்ளோட்டம் நடைபெறுகிறது. காலையில் சாமிக்கும், பின்னர் புதிய தேருக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது. தொடர்ந்து பெரியநாயகி அம்மன் தேர் வெள்ளோட்டம் நடைபெற இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் நாகராஜன், ஆய்வாளர் ஜெயசித்ரா ஆகியோர் செய்து வருகின்றனர்.

தொடர்ந்து ஆண்டு தோறும் நடைபெறும் பிரம்மோற்சவம் நாளை(வியாழக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதில் தினசரி வீரட்டானேஸ்வரர், பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது. சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் 14-ந்தேதி காலை 7.30 மணிக்கு நடைபெற உள்ளது. 
Tags:    

Similar News