ஆன்மிகம்
தெப்பத்தில் அனந்தசயன கோலத்தில் கோட்டை மாரியம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்ததை படத்தில் காணலாம்.

திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவிலில் அனந்தசயன கோலத்தில் தெப்ப உற்சவம்

Published On 2019-02-20 11:20 IST   |   Update On 2019-02-20 11:20:00 IST
திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவிலில், அனந்தசயன கோலத்தில் தெப்ப உற்சவம் நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேற்று சாமி தரிசனம் செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவிலாக, திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில் விளங்கி வருகிறது. இந்த கோவிலின் மாசித்திருவிழா கடந்த மாதம் 31-ந்தேதி பூத்தமலர் அலங்காரத்துடன் தொடங்கி, கொடியேற்றம், பூக்குழி இறங்குதல், தசாவதாரம், கொடியிறக்கம் உள்பட பல்வேறு உற்சவ நிகழ்ச்சிகள் நடைபெற்று நேற்று முன்தினம் அம்மனின் ஊஞ்சல் உற்சவம் நடந்தது.

அதனைத்தொடர்ந்து மாசித்திருவிழாவின் நிறைவுநாள் நிகழ்ச்சியாக அம்மனின் தெப்ப உற்சவம் நேற்று நடந்தது. இதையொட்டி காலை 10.30 மணியளவில் அம்மனுக்கு பால், சந்தனம், வாசனை திரவியங்கள் உள்பட 16 வகையான சிறப்பு அபிஷேகம், பகல் 12 மணியளவில் சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.

பின்னர் மாலை 6 மணியளவில் கோவிலில் தெப்ப உற்சவம் நடந்தது. இதையொட்டி கோவில் கருவறை முன்பு 8 அடி நீளம், 8 அடி அகலம், 1½ ஆடி ஆழத்தில் புதிய தெப்பம் ஒன்று அமைக்கப்பட்டது. அந்த தெப்பத்தில் மரிக்கொழுந்து, தாமரை, மல்லிகை போன்ற மலர்கள் மிதக்க அதில் அனந்தசயன கோலத்தில் கோட்டை மாரியம்மன் இருப்பதை போன்று சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. அம்மனின் அனந்தசயன கோலம் கண்கொள்ளா காட்சியாக இருந்தது. பின்னர் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், பூஜைகள் நடைபெற்றன.

மாசித்திருவிழாவின் நிறைவுநாள் என்பதால் கோவிலில் கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது. கூட்ட நெரிசலை தவிர்க்க நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்ய சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அதன்படி ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேற்று சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக பரம்பரை அறங்காவலர் சண்முக முத்தரசப்பன் தலைமையில் கோவில் நிர்வாகிகள், மண்டகப்படிதாரர்கள் செய்து இருந்தனர்.
Tags:    

Similar News