ஆன்மிகம்
பக்தர்கள் தீமித்த காட்சி.

பிரம்மோற்சவத்தையொட்டி மாரியம்மன் கோவிலில் செடல், தீமிதி நிகழ்ச்சி

Published On 2018-07-31 04:06 GMT   |   Update On 2018-07-31 04:06 GMT
பிரம்மோற்சவத்தையொட்டி சிதம்பரம் கீழத்தெரு மாரியம்மன் கோவிலில் செடல் மற்றும் தீமிதி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.
சிதம்பரத்தில் பிரசித்திபெற்ற கீழத்தெரு மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் பிரம்மோற்சவம் வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவம் கடந்த 20-ந் தேதி இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதனை தொடர்ந்து தினமும் கீழத்தெரு மாரியம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்று வந்தது. நேற்று முன்தினம் தேரோட்டம் நடந்தது.

விழாவின் சிகர நிகழ்ச்சியான செடல் உற்சவம் மற்றும் தீமிதி நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு மாரியம்மனுக்கு பால், தயிர், தேன், இளநீர், குங்குமம் உள்ளிட்ட 18 வகையான பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் கீழத்தெரு மாரியம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதனை தொடர்ந்து பக்தர்கள் மாவிளக்கு எடுத்தும், அங்கபிரதட்சணம் செய்தும், பால்காவடி எடுத்தும், பாடை பிரார்த்தனை செய்தும், அக்னி சட்டி எடுத்தும் மாரியம்மனை வழிபட்டனர்.



சிதம்பரம் பஸ் நிலையத்தில் இருந்து உடலில் அலகு குத்தி பக்தர்கள், பறக்கும் காவடி எடுத்து கோவிலுக்கு வந்து மாரியம்மனை வழிபட்டனர். இதையடுத்து கோவில் முன்பு தீக்குண்டம் அமைக்கப்பட்டது. பாலமான் வாய்க்காலில் இருந்து சக்தி கரகம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. பின்னர் கரகம் எடுத்து வந்த பக்தர் முதலில் தீக்குண்டத்தில் இறங்கினார். இதனை தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.

விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் குழு தலைவர் பிரேமாவீராசாமி, பரம்பரை அறங்காவலர் ஸ்தானிகர் கலியமூர்த்தி பிள்ளை மற்றும் கோவில் நிர்வாகிகள், பக்தர்கள் செய்திருந்தனர். விழாவையொட்டி எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாமல் இருக்க துணை போலீஸ் சூப்பிரண்டு பாண்டியன் தலைமையிலான 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

கீழத்தெரு மாரியம்மன் கோவிலில் செடல் மற்றும் தீமிதி நிகழ்ச்சியையொட்டி சிதம்பரம் நகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது. அதாவது சிதம்பரம் பஸ் நிலையத்துக்குள் பஸ்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. மாறாக வெளியூர்களில் இருந்து வந்த அனைத்து பஸ்களும் கீழவீதி, தெற்கு வீதியில் நிறுத்தப்பட்டது. பின்னர் அங்கிருந்து வெளியூர்களுக்கு புறப்பட்டு சென்றன. 
Tags:    

Similar News