முக்கிய விரதங்கள்
வாராஹி

பஞ்சமி திதியில் வாராஹி அம்மனை விரதம் இருந்து வழிபாடு செய்தால் தீரும் பிரச்சினைகள்

Update: 2022-05-20 05:03 GMT
இன்று வாராஹி அம்மனுடைய நாமத்தை உச்சரித்து கஷ்டங்கள் தீர வேண்டும் என்று மனதார பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும்.
வராஹி அம்மனை வழிபாடு செய்வதில் நிறைய பேருக்கு இன்றளவும் மனதில் சந்தேகம் இருக்கின்றது. வாராஹி அம்மனை வீட்டில் வைத்து வழிபாடு செய்யலாமா? உடலளவிலும் மனதளவிலும் சுத்தமாக இருப்பவர்கள் அம்மனை வீட்டில் திருவுருவப்படம் ஆக வைத்து தாராளமாக வழிபாடு செய்யலாம்.

அத்தனை சுத்தத்தினையும் எங்களால் பின்பற்ற முடியாது என்பவர்கள் வாராஹி அம்மனை மனதார நினைத்து, தீபத்தில் ஆவாகனம் செய்து, தீபச்சுடரை அம்மனாக நினைத்து வழிபாடு செய்யலாம். வாராஹி அம்மனை வழிபடக்கூடிய இன்றைய தினம் சுத்தபத்தமாக விரதம் இருந்து மனதார வழிபடுவதில் தவறொன்றும் கிடையாது.

இன்று மாலை வராஹி அம்மனை வழிபடுவதற்கு முன்பு ஒருமுறை சுத்தமாக குளித்து விடுங்கள். வீட்டை சுத்தம் செய்து விடுங்கள். நல்ல தேங்காயாக பார்த்து ஒன்றை வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும். சுத்தமான தேங்காய் எண்ணெய் அல்லது நெய் தேவை. சிவப்பு நிறத்தில் விளக்குத்திரி, சிவப்பு நிற பூ, நிவேதனமாக பானகம், கிழங்கு வகைகள், கருப்பு சுண்டல் இதில் ஏதாவது ஒன்றை தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள். வாழை இலை கிடைத்தால் வாழை இலையை பயன்படுத்தலாம். இல்லை என்றால் எச்சில் படாத தட்டு, இரண்டு கைப்பிடி அளவு பச்சரிசி.

பூஜை அறையில் எப்போதும் போல உங்கள் வீட்டு வழக்கப்படி தீபமேற்றி வைத்து விடுங்கள். சிறிய தட்டில் கொஞ்சமாக பச்சரிசியை பரப்பி தேங்காயை உடைத்து வைத்து அந்த பச்சரிசியின் மேல், உடைத்த தேங்காய்களை வைத்துக்கொள்ள வேண்டும். தேங்காய்க்கு உள்ளே தேங்காய் எண்ணெய் அல்லது நெய் ஊற்ற வேண்டும். இதில் சிவப்பு திரைபோட்டு வாராஹி அம்மனை மனதார நினைத்து கஷ்டங்கள் தீர வேண்டும் என்று தீபம் ஏற்றி வைத்து விடுங்கள். வாழை இலை இருந்தால் வாழை இலையின் மேல் பச்சரிசியைப் பரப்பி தேங்காய் தீபம் ஏற்றலாம்.

அதன் பின்பு நீங்கள் தயார் செய்த நிவேதனத்தை அம்மனுக்கு வைத்து, தீப தூப கற்பூர ஆராதனை செய்து பூஜை அறையில் அமர்ந்து வாராஹி அம்மனுடைய நாமத்தை உச்சரித்து கஷ்டங்கள் தீர வேண்டும் என்று மனதார பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும். தேய்பிறை பஞ்சமி திதியான இன்று மாலை 8 லிருந்து 9 மணிக்குள் இந்த தீபத்தை உங்களுடைய வீட்டில் ஏற்றினால் எதிரி தொல்லை நீங்கும். பணக்கஷ்டம் நீங்கும். கடன் சுமை குறையும். தீராத நோய்கள் தீரும். இப்படி வாழ்க்கையில் இருக்கக்கூடிய இன்னல்கள் அனைத்திற்கும் படிப்படியாக விடிவு காலம் பிறக்க தொடங்கும்.

இந்த பரிகார தீபத்தை ஏற்றி வைத்துவிட்டு அந்த தேங்காயை நீங்கள் சமையலுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். அப்படி இல்லை என்றால், தேங்காயை மட்டும் எடுத்து பசு மாட்டிற்கு கொடுத்துவிடலாம். கர்ம வினைகளால் செய்த பாவங்கள் நீங்க கஷ்டங்களில் இருந்து விடுபட இன்று மாலை அனைவரும் வாராஹி அம்மனை வழிபாடு செய்து பலன் அடைய வேண்டும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.
Tags:    

Similar News