ஆன்மிகம்
விஷ்ணு

நாளை இந்திரா ஏகாதசி: விரதம் அனுஷ்டிக்கும் முறையும்... கிடைக்கும் பலன்களும்

Update: 2021-10-30 01:42 GMT
ஐப்பசி மாதத் தேய்பிறையில் வரும் ஏகாதசி இந்திரா ஏகாதசி எனப்படும். பித்ருக்களின் சாபத்தை நீக்கும் சக்தி இந்திரா ஏகாதசி விரதத்திற்கு உள்ளது.
ஐப்பசி மாதம் தேய்பிறையில் வரும் ஏகாதசியை, ‘இந்திர ஏகாதசி’ என்பார்கள். இந்த ஆண்டுக்கான இந்திர ஏகாதசி, 31.10.2021 (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.30 மணிக்கு தொடங்கி, மறுநாள் காலை 10 மணி வரை உள்ளது. இந்த ஏகாதசிவிரதம், நாரதர் மூலமாக வெளிப்பட்டது.

புராண காலத்தில் இந்திரசேனன் என்ற மன்னன், மாஹிஷ்மதி என்ற நகரை ஆட்சி செய்தான். ஒருநாள் அவனது அரசவைக்கு நாரத முனிவர் வருகை தந்தார். அவரை வரவேற்று அமரச் செய்த மன்னன், நாரதர் வந்ததற்கான காரணத்தைக் கேட்டறிந்தான்.

அதற்கு நாரதர், “நான் எமலோகம் சென்றிருந்தபோது, உன்னுடைய தந்தையை சந்தித்தேன். அங்கு நரகத்தில் அவர் கடும் துன்பத்தை அனுபவிக்கிறார். அவர் என்னிடம், ‘என் மகனிடம் கூறி, இந்திர
ஏகாதசி
விரதத்தை மேற்கொள்ளச் செய்யுங்கள். அப்படிச் செய்தால், நான் இந்த நரகத்தில் இருந்து விடுபடுவேன். என்னை கரையேற்றும்படி அவனிடம் கூறுங்கள்’ என்று சொல்லியனுப்பினார். அதற்காகவே நான் வந்தேன்” என்றார்.

அதைக் கேட்ட மன்னன், தந்தையின் நிலை அறிந்து வருந்தினான். தொடர்ந்து தன் தந்தையின் ஆன்மா துன்பத்தில் இருந்து விடுபடுவதற்காக, இந்திர ஏகாதசி விரதம் மேற்கொள்ள முடிவு செய்தான். அதற்கான வழிமுறைகளை நாரத முனிவரிடம் இருந்துகேட்டு, அதன்படியே செய்தான். இதனால் அவனது தந்தை நரக வேதனையில் இருந்து விடுபட்டு சொர்க்கம் சென்றார்.

இந்த இந்திர ஏகாதசி விரதத்தை மேற்கொண்டால், முன்னோர்களின் ஆசி நமக்குக் கிடைக்கும். மேலும் முன்னோர்களின் ஆன்மா, நரகத்தில் துன்பம் அனுபவித்து வந்தால், அவர்களின் சந்ததியினர் செய்யும் இந்திர ஏகாதசி விரதத்தின் காரணமாக, அந்த துன்பத்தில் இருந்து விடுபடுவார்கள்.

இன்றும் பல குடும்பங்களில் ஓரளவுக்கு வசதிகள் இருந்தும், குடும்பத்தில் நிம்மதி இல்லாத தன்மை நிலவுகிறது. இதுபற்றி விவரம் அறிந்த ஜோதிடர்களிடம் போய் கேட்டால், ‘பித்ருக்களின் சாபமே இதற்குக் காரணம்’ என்று கூறுவார்கள். அப்படிப்பட்டவர்கள் இந்த விரதத்தை கடைப்பிடித்தால், நரகத்தில் இடர்படும் நமது முன்னோர்களும் விடுதலையாகி நலம் பெறுவார்கள்; நாமும் நலம் அடையலாம்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த ஐப்பசி வளர்பிறை ஏகாதசி தினத்தில் அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு, அருகிலுள்ள பெருமாள் கோயிலுக்கு சென்று பெருமாளை வழிபட்ட பின்பு, வீட்டிற்கு வந்து பெருமாள் படத்திற்கு வாசம் மிகுந்த பூக்கள் சாற்றி, தீபமேற்ற வேண்டும். பின்பு உங்கள் வீட்டிலோ அல்லது அருகில் எங்கேனும் நெல்லி மரம் இருக்கும் பட்சத்தில் அம்மரத்திற்கு தீப ஆராதனை காட்டி, லட்சுமி தேவியின் மந்திரங்களை துதித்து வழிபட வேண்டும். உடல் நிலை நன்கு உள்ளவர்கள் இத்தினத்தில் காலை முதல் மாலை வரை எதுவும் உண்ணாமல் விரதம் இருக்க வேண்டும் அல்லது துளசி இலைகள் போட்டுவைத்த தீர்த்த நீரை அருந்தி விரதம் இருக்கலாம்.

அன்றைய நாள் முழுவதும் விஷ்ணு புராணம், பெருமாள் ஸ்தோத்திரம் போன்றவற்றை பாராயணம் செய்வது நல்லது. மாலையிலும் பெருமாள் கோயிலுக்கு சென்று வழிபட்ட பின்பு வீட்டிற்கு திரும்பி பால், பழம் சாப்பிட்டு விரதத்தை முடிக்க வேண்டும். மேற்கூறிய முறைப்படி இந்திர ஏகாதசி விரதத்தை அனுஷ்டிப்பவர்கள் மறைந்த அவர்களின் பல தலைமுறை முன்னோர்கள் நற்கதி பெற்று, அவர்களின் ஆசிகள் கிடைக்கப்பெற்று நாம் ஈடுபடுகின்ற அனைத்து காரியங்களிலும் மகத்தான வெற்றிகளை பெற உதவும். நாராயணனாகிய பெருமாள் மற்றும் லட்சுமி தேவியின் அருள் கிடைத்து குடும்பத்தில் சுபிட்சம் பெருகும்.

Tags:    

Similar News