சனிபகவானால் நமக்கு சாதகமான பலன்கள் ஏற்படுவதைத் தடுத்து யோகங்களும் அதிர்ஷ்டங்களும் ஏற்பட செய்யும் ஒரு சிறந்த வழிமுறை தான் சனிக்கிழமை விரதம்.
சனிக்கிழமை விரதம் மேற்கொள்பவர்கள் சனிக்கிழமையில் வருகிற பூசம், அனுஷம், உத்திரட்டாதி ஆகிய நட்சத்திர தினங்கள் ஏதேனும் ஒன்றில் சனி பகவான் விரதம் மேற்கொள்ள தொடங்கி 21 சனிக்கிழமைகள் இந்த விரதத்தை மேற்கொள்ள வேண்டும். அன்றைய தினத்தில் அதிகாலையில் எழுந்து குளித்து முடித்ததும் உங்கள் வீட்டின் பூஜையறையை கழுவி சுத்தம் செய்து, பீடம் வைத்து, அதன் முன்பாக அரிசி மாவில் தாமரை பூ கோலம் போட வேண்டும். பின்பு அக்கோலத்தின் நடுவில் ஒரு கலசத்தில் நீரை நிரப்பி வைக்க வேண்டும்.
சனி பகவானின் அம்சம் கொண்டவர் திருப்பதி திருமலை வெங்கடாசலபதி ஆவார். எனவே அவரின் சிறிய அளவிலான படத்திற்கு வாசமுள்ள பூக்களை சூட்டி, புது நீல நிற துணியை வைத்து, எள் கொண்டு செய்யப்பட்ட பலகாரங்களை நைவேத்தியம் வைக்க வேண்டும். விரதம் மேற்கொள்பவர்களும் நீல நிற உடைகளை அணிந்து கொண்டு நெய் தீபங்கள் ஏற்றி, சந்தன மணம் கொண்ட தூபங்கள் கொளுத்தி சனி பகவானுக்குரிய மந்திரங்கள், ஸ்தோத்திரங்கள் துதித்து சனி பகவானுக்கு பூஜைகள் செய்ய வேண்டும்.
சனிக்கிழமை விரதம் மேற்கொள்பவர்கள் காலை முதல் மாலை வரை ஏதும் உண்ணாமல், அருந்தாமல் விரதம் மேற்கொள்ள வேண்டும். காலையில் சிறிது உணவை காகங்கள் உண்ண வைக்க வைக்க வேண்டும். காலை, மாலை ஆகிய இரண்டு வேளையும் சனிபகவான் அம்சம் நிறைந்த வெங்கடாசலபதிக்கு பூஜைகள் செய்ய வேண்டும்.
மாலையில் பூஜை செய்து முடித்து, நைவேத்திய பிரசாதத்தை சாப்பிட்டு விரதம் முடித்ததும் வசதி குறைந்த, ஊனமுற்ற நபர்களுக்கு உங்களால் இயன்ற தானங்களை அளிப்பது மிகுந்த நன்மையை தரும். நீல நிற ஆடைகள், எள், நல்லெண்ணெய் போன்றவற்றை அளிப்பது உங்களின் சனி கிரக தோஷங்கள் நீங்கி சனி பகவானின் ஆசிகளை உங்களுக்கு பெற்றுத்தரும்.