ஆன்மிகம்

பச்சைப்பட்டினி விரதமிருக்கும் சமயபுரத்தாள்

Published On 2019-04-08 06:18 GMT   |   Update On 2019-04-08 06:18 GMT
சமயபுரம் மாரியம்மன் உலக நன்மைக்காகவும், தம் பிள்ளைகளாகிய உலக மக்களுக்காகவும் ஒவ்வொரு வருடமும் பச்சைப்பட்டினி விரதம் மேற்கொள்கிறாள்.
தாயிற்காக விரதம் இருக்கும் பிள்ளைகள் உண்டு. சாமிக்காக விரதமிருக்கும் பக்தன் உண்டு. பிள்ளைகள் நலனுக்காக பட்டினி இருக்கும் தாய் எங்கேனும் உண்டா?, பக்தனின் நலனுக்காக விரதம் இருக்கும் சாமி எங்கேனும் உண்டா? உண்டு. அதுதான் நம்ம சமயபுரத்து மாரியம்மன். தமிழகத்தில் உள்ள மாரியம்மன் தலங்களில் தலைமை தலமாகவும், அம்மன் சுயம்புவாக தோன்றிய தலமுமாக திகழ்வது சமயபுரம் மாரியம்மன் கோயில்.

இது, திருச்சிக்கு வடக்கே ஓடும் காவிரியின் வட கரையிலிருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. சமயபுரம் மாரியம்மன் கோயிலில் நடைபெறும் ஒவ்வொரு வைபவங்களும் மனித வாழ்க்கையில் கடைபிடிக்கப்படும் சடங்குகள். உறவுகளிடையே பந்த பாச பிணைப்பை ஏற்படுத்தும் உயிர்ப்புள்ள வைபவங்கள். அண்ணன், தங்கை உறவின் உன்னத மாண்பே, மணமுடித்துக் கொடுத்த பின், அவளுக்கு அன்னைக்கு அன்னையாய், தந்தைக்கு தந்தையாய் திகழ்வது அவளது அண்ணன் உறவு தான். அதனால் தான் தாயை விட பத்து மடங்கு உயர்வானது தாய்மாமன் உறவு என்று முன்னோர்கள் சொல்லி வைத்தார்கள்.

அந்த உறவின் ஆழத்தை புரிய வைக்கும் வைபவமாக தை மாதம் பொங்கல் சீர், சித்திரை சீர், கார்த்திகை சீர் வழங்கப்படுவதுண்டு. அதை மெய்ப்பிக்கும் வகையில் சமயபுரத்தாளுக்கு, அண்ணன் ஸ்ரீரங்கநாதர் தை மாதம் சீர் கொடுக்கும் வைபவம் மிகச்சிறப்பாக நடைபெறுகிறது.

உலக நன்மைக்காகவும், தம் பிள்ளைகளாகிய உலக மக்களுக்காகவும் ஒவ்வொரு வருடமும் மாசி மாதம் கடைசி ஞாயிறு அன்று பச்சைப்பட்டினி விரதம் மேற்கொள்கிறாள்.

அன்றிலிருந்து 28 நாட்கள் விரதம் மேற்கொள்ளும் சமயபுரத்தாள் பங்குனி மாதம் கடைசி ஞாயிற்றுக் கிழமை தனது விரதத்தை முடிக்கிறாள். விரத நாட்களில் அம்மனுக்கு உரலில் இடிக்கப்பட்ட பச்சரிசி மாவு, வெல்லம், திராட்சை, ஆரஞ்சு, இளநீர் பானகம் போன்றவை மட்டுமே நிவேதிக்கப்படுகிறது. விரதம் முடிவுறும் நாளில் ஆத்தா சமயபுரத்தாளின் அக்காவாக கருதப்படும் திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி கோயிலில் இருந்து அபிஷேக திரவியங்கள், பட்டு வஸ்திரம், மாலை, சந்தனம், தாம்பூலம் ஆகியவற்றுடன் தயிர் சாதம், காய்கறி கூட்டு ஆகியவை தங்கை சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு கொண்டு செல்லப்படும்.

அன்றைய தினம் மாலை 7 மணியளவில் திருவானைக்காவலில் இருந்து தளிகை மற்றும் அபிஷேக திரவியங்கள், மாலைகள், வஸ்திரங்களை யானை மீது எடுத்துக்கொண்டு மேளதாளங்கள் முழங்க இரவு 9 மணியளவில் சமயபுரம் வருவார்கள். சமயபுரம் மாரியம்மன் கோயிலுள்ளோர் மாலை அணிவித்து வரவேற்பார்கள்.

திருவானைக்காவல் கோயிலிலிருந்து கொண்டு வரப்பட்ட அபிஷேக பொருட்களால் சமயபுரம் மாரியம்மனுக்கு அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெறும். பின்னர் தளிகை நிவேதத்துடன் தனது பச்சைப்பட்டினி விரதத்தை சமயபுரத்தாள் நிறைவு செய்வார். அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இத்தலத்தில் வேண்டிக்கொண்டு குணமடைவது மிகவும் பிரசித்தி பெற்றது. இத்தலத்திலேயே குறிப்பிட்ட நாட்கள் தங்கி அங்கு கோயிலில் வேலை செய்து நேர்த்திக்கடனை நிறைவேற்றுபவர்களும் உண்டு.
Tags:    

Similar News