இஸ்லாம்
இஸ்லாம்

உங்கள் இலக்கு எது?

Published On 2022-01-18 05:03 GMT   |   Update On 2022-01-18 05:03 GMT
அல்லாஹ் நம்மைக் கவனிக்கின்றான், கண்காணிக்கின்றான், பார்க்கின்றான் என்ற அச்சம் இருந்தால் உலக மோகத்தில் மூழ்கிட மாட்டோம். தீய செயல்களில் ஈடுபடமாட்டோம்.
இறைவன் இவ்வுலகைப் படைத்து அவற்றில் உயிரினங்களையும், மனிதர்களையும் படைத்தான். ஏனைய படைப்புகளுக்கு சாதாரண அறிவைக்கொடுத்த இறைவன் மனிதனுக்கு மட்டும் பகுத்தறிவைக் கொடுத்தான். காரணம், அனைத்தையும் மனிதன் பகுத்துணர்ந்து அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக. ஆயினும் ஏனைய உயிரினங்கள் எல்லாம் தங்களுக்கு வழங்கப்பட்ட அறிவின் அடிப்படையில் இறைவனுக்கு கீழ்படிகின்றன. ஆனால் பகுத்தறிவு வழங்கப்பட்ட மனிதன் ஏனோ இறைவனுக்குக் கீழ்ப்படியத் தயங்குகின்றான்.

காரணம் என்ன?

உலக ஆசைகள்தான் மனிதனை இறைவனுக்குக் கீழ்படிய அனுமதிப்பதில்லை. உலகமே நிரந்தரம் என்றும், இனிஒருபோதும் இறைவனிடம் திரும்ப மாட்டோம் என்று கருதுவதும், தன்னைத் தானே ஏமாற்றுவதாகும். காரணம், மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் தெரியும், யாரும் இங்கே நிரந்தரமாக வாழ முடியாது என்று. பிறந்தவர் எவரேனும் இறக்காமல் இருந்திருக்கின்றார்களா? பின் எதற்காக இந்த உலகின் மீதும் உலகில் உள்ள எல்லா பொருட்கள் மீதும் வெறிகொண்டவர் போல் மோகம் கொள்ள வேண்டும்?

எப்போது மனித உள்ளத்தில் உலக மோகம் வருகின்றதோ, அப்பொழுது அவன் தன்னையே மறந்து விடுகிறான். அந்த ஆசை அவனை மிருகத்தன்மை கொண்டவனாக மாற்றிவிடுகிறது.

பேரறிஞர் ரூமி (ரஹ்) ஓர் உதாரணத்தின் மூலம் இதனை இவ்வாறு விளக்குகிறார்:

மனிதன் உலகில் வாழ்வதற்கு எண்ணற்ற விஷயங்கள் தேவைப்படுகின்றன. உலகம் கடல் நீருக்கு ஒப்பானது. அந்த நீரில் ஓடும் கப்பல் போன்றதுதான் மனித வாழ்வு. நீரின்றி கப்பல் எவ்வாறு செயல்படாதோ, அவ்வாறே பொருட்களின்றி உலகில் வாழ முடியாது. கப்பலுக்கு வெளியே நாலாபுறமும் தண்ணீர் சூழ்ந்திருக்கும் வரைதான் அந்த நீரால் கப்பலுக்குப் பயன். அதேவேளை அந்த நீர் கப்பலுக்குள் வந்துவிட்டால் முழுக் கப்பலும் மூழ்கிவிடும். அவ்வாறுதான் உலகமும். நமது பயன்பாட்டையும், தேவையையும் தாண்டி பேராசை உள்ளங்களுள் வந்துவிட்டால், அந்தக் கப்பலுக்கு ஏற்படும் நிலைதான் மனிதனுக்கும் ஏற்படும். பின்னர் பாவங்களில் மூழ்கி வாழ்க்கையே நிம்மதியற்றதாகி, இவ்வுலகையும் மறுமையையும் ஒருசேர இழக்கும் நிலை ஏற்படும்.

செல்வத்தைத் தேடும் வேகத்தில் கட்டாயக் கடமைகளைக்கூட நாம் கண்டுகொள்வதில்லை. தொழுகையையும், நோன்பையும் தவற விடுகின்றோம். குர்ஆனை தலைகுனிந்து ஓதி இருக்கின்றோமா? நாம் தலை நிமிர்ந்து வாழ்வதற்கான வழிகாட்டி நூல் அல்லவா அது. ஆனால் செல்போனை, எவ்வளவு நேரமாக இருந்தாலும் தலைகுனிந்து பார்க்கின்றோம்!

அல்லாஹ் நம்மைக் கவனிக்கின்றான், கண்காணிக்கின்றான், பார்க்கின்றான் என்ற அச்சம் இருந்தால் உலக மோகத்தில் மூழ்கிட மாட்டோம். தீய செயல்களில் ஈடுபடமாட்டோம்.

ஒருமுறை நபி (ஸல்) அவர்கள் தோழர்களுடன் ஒரு வழியாக சென்று கொண்டிருந்தார்கள். அங்கு ஓர் ஆட்டுக்குட்டி காது அறுபட்டு இறந்த நிலையில் துர்நாற்றத்துடன் கிடந்தது. நபி (ஸல்) அவர்கள் அந்த செத்த ஆட்டுக் குட்டியை யாரேனும் ஒரு திர்ஹத்திற்கு வாங்க விரும்புகிறீர்களா? என்று கேட்டார்கள்.

அதற்கு தோழர்கள் இந்த ஆட்டுக்குட்டி உயிருடன் இருந்தாலும் இதன் காது அறுபட்டிருப்பதால் இதனை யாரும் வாங்க விரும்பமாட்டோம். ஆயினும் இது இறந்து கிடக்கிறது. இதை எவ்வாறு நாங்கள் வாங்க விரும்புவோம் என்று கூறினார். அதனைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள், இந்த செத்த ஆட்டுக்குட்டி (உங்களிடத்தில்) எவ்வாறு மதிப்பற்றதோ, அதைவிடவும் அல்லாஹ்விடத்தில் இந்த உலகம் மதிப்பற்றது என்று கூறினார்கள்.

உலகில் வாழும் நாம், வாழ்வதற்காகவும் தேவைக்காகவும் மட்டுமே உலக ஆசைகொள்ள வேண்டும். அதுவே வெறியாக மாறக்கூடாது. தேவைக்கும் அவசியத்திற்கும் உலக ஆசை கொள்வது வேறு. உலகே கதியென்று கிடப்பது வேறு. வாழும் காலம்வரை ஆசைக்கு அணைபோட்டு தடுத்துக்கொள்வோம். காரணம், மறுமை வெற்றிக்கு உலக மோகம் ஒருபோதும் தடையாக மாறிவிடக் கூடாது.

உலகம் நிலையானது அல்ல. மறுமை மட்டுமே நிலையானது. மறுமை வெற்றிதான் ஓர் இறைநம்பிக்கையாளனின் ஒரே இலக்காக இருக்க வேண்டும்.

அம்ஜத் கான், திருச்சி.
Tags:    

Similar News