ஆன்மிகம்
இஸ்லாம் வழிபாடு

நற்சிந்தனைகளால் சிறப்பு பெறுவோம்

Published On 2021-05-08 03:53 GMT   |   Update On 2021-05-08 03:53 GMT
நோன்பு ஒரு உயர்ந்த வணக்கம். அதைப் பற்றிக்கொள்வதால் கண்ணியமான வாழ்க்கை கிடைக்கும். கண்ணியமானவர்களாகவும் மாற்றம் பெறலாம். வாழ்க்கையில் முன்னேற்றம் பெற நோன்பு நோற்போம், உயர்வை அடைவோம்.
புனித ரமலானுக்கு ‘ஷஹ்ருன் அழீம்’ - ‘கண்ணியமான மாதம்’ எனும் தத்துவப் பெயரும் உண்டு.

கண்ணியம் நிறைந்த, உயர்வான சிந்தனைகளை இம்மாதம் விதைக்கிறது. சாதாரண அடியார்களை கண்ணியமிக்கவர்களாக மாற்றம் அடையச்செய்கிறது.

மனிதனின் உயர்வான சிந்தனைகள் வருமாறு:

1) வாய்மை, 2) அமானிதம் (நம்பி ஒப்படைக்கப்பட்டதை திரும்பக் கொடுப்பது), 3) நிதானம், 4) சாந்தம், 5) பொறுமை, 6) உபகாரம், 7) நேர்மை, 8) கொடைத்தன்மை, 9) பிறருக்கு முன்னுரிமை, 10) நீதி, 11) மென்மை, 12) நன்றி, 13) நாவடக்கம், 14) பத்தினித்தனம், 15) கொடுத்த வாக்கை நிறைவேற்றுவது, 16) பணிவு, 17) பிறரின் குறைகளை மறைத்தல், 18) மன்னிக்கும் மனப்பான்மை, 19) ஒருவருக்கொருவர் உதவிடும் தன்மை, 20) இரக்க சிந்தனை, 21) போதும் என்ற மனப்பான்மை, 22) நன்மை, 23) நாணம், 24) பிறரை நேசிக்கும் மனப்பான்மை, 25) சேவை மனப்பான்மை, 26) பிறரை மதிக்கும் மனப்பான்மை, 27) இருப்பதைக் கொண்டு திருப்தியோடு இருப்பது, 28) சமமாக நடக்கும் தன்மை.

இது போன்ற உயர்வான பல சிந்தனைகளை மனித மனதில் விதைத்து, கண்ணியமானவர்களை உருவாக்கும் செயல்களைத்தான் புனித ரமலான் நோன்பு செய்கின்றது. அதிகமான நற்சிந்தனைகளை விதைத்து, பல நல்ல உள்ளங்களையும், கண்ணியமான மனிதர்களையும் உருவாக்கும் மாதம் தான் ரமலான்.

அபூ உமாமா (ரலி) அறிவிப்பதாவது: “நான் நபி (ஸல்) அவர்களிடம் ‘அல்லாஹ்வின் தூதரே, எனக்கு பயன்தரும் ஒரு விஷயத்தை என்னிடம் ஏவுங்கள்’ என வேண்டியபோது ‘நோன்பு நோற்பதை நீர் அவசியமாக்கிக் கொள்வீராக, அதைப் போன்று வேறெதுவும் கிடையாது’ என நபி (ஸல்) கூறினார்கள்”.

‘செயலில் சிறந்தது எது?’ என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘நோன்பை பற்றிக் கொள்வீராக, அதற்கு ஈடானது வேறு எதுவும் வரமுடியாது’ என்று கூறினார்கள்.

பிறகு நான் நபியவர்களிடம் வந்து, ‘நான் போரில் கலந்து கொள்ளும் பாக்கியம் வேண்டி எனக்காக பிரார்த்தனை புரியுங்கள்’ என வேண்டியபோது, ‘இறைவா அவர்களை போரில் கலந்து கொள்ளச் செய்து, வெற்றி வாகை சூடி, போரின் செல்வங்களை அவர்களுக்கு வழங்குவாயாக’ என மூன்று தடவை நபி (ஸல்) வேண்டினார்கள்.

பிறகு நான் நபியவர்களிடம் வந்து ‘இறைவனின் தூதரே, நீங்கள் பிரார்த்தித்தது போலவே நடந்துவிட்டது. ‘நான் சொர்க்கத்தில் நுழையும்படி ஒரு செயலை எனக்கு ஏவுங்கள்’ என்று கேட்டேன். அதற்கும் நபி (ஸல்) அவர்கள் ‘உம் மீது நோன்பு நோற்பதை கடமையாகக் கொள்வீராக. அதற்கு நிகரானது வேறு எதுவும் கிடையாது’ என்று கூறினார்கள். (நூல்: இப்னு ஹிப்பான்)

இதற்குப் பிறகு அபூஉமாமா (ரலி) அவர்களின் வீட்டில் புகை வருவதை பார்க்க முடியாது. பகலில் அவரின் வீட்டில் அடுப்பு எரியாது. அதிகமாக நோன்பு நோற்றுக் கொண்டே இருந்தார்கள்.

அவரின் வீட்டில் புகை வெளியே வந்தால், மக்கள் விளங்கிக் கொள்வார்கள் ‘இன்று அவரின் வீட்டுக்கு விருந்தாளிகள் வந்திருப்பார்கள்’ என்பதாக.

அந்தளவுக்கு நோன்பு ஒரு உயர்ந்த வணக்கம். அதைப் பற்றிக்கொள்வதால் கண்ணியமான வாழ்க்கை கிடைக்கும். கண்ணியமானவர்களாகவும் மாற்றம் பெறலாம். வாழ்க்கையில் முன்னேற்றம் பெற நோன்பு நோற்போம், உயர்வை அடைவோம்.

மவுலவி அ. செய்யது அலி மஸ்லஹி, பாட்டப்பத்து, திருநெல்வேலி டவுண்.

இப்தார்: மாலை 6.40 மணி

நாளை சஹர் முடிவு: அதிகாலை 4.23 மணி
Tags:    

Similar News