பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் நடைபெற்றது. கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் இன்றி இந்த நிகழ்ச்சி நடந்தது.
பின்னர் பொற்சின்னம் இடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு சிறப்பு அலங்காரம், ஆராதனை, கன்னிகா தானம், மாங்கல்ய பூஜை நடந்தது. அதையடுத்து வள்ளி-தெய்வானைக்கு பழனி கோவில் பட்டத்து குருக்கள் அமிர்தலிங்கம் திருமாங்கல்யம் அணிவித்து திருக்கல்யாணத்தை நடத்தி வைத்தார். மாங்கல்யம் அணிவித்தலை அடுத்து மலர்மாலை மாற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. ப
பின்னர் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் திருமண கோலத்தில் எழுந்தருளினார். இரவில் வெள்ளி மயில் வாகனத்தில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று நடந்த திருக்கல்யாணத்திலும் பக்தர்கள் கலந்து கொள்ளவில்லை.
வழக்கமாக திருக்கல்யாண நிகழ்ச்சியை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள். அப்போது பக்தர்களின் சரண கோஷம் பழனியையே அதிர வைக்கும். ஆனால் நேற்று நடந்த திருக்கல்யாணம் பக்தர்களின் 'அரோகரா' கோஷம் இன்றி நடந்தது.
இதற்கிடையே திருவிழாவில் இன்று (செவ்வாய்க்கிழமை) சிகர நிகழ்ச்சியாக தேரோட்டம் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியிலும் பக்தர்கள் கலந்துகொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தைப்பூச திருவிழாவில் பக்தர்களுக்கு தடை உள்ள போதிலும், பழனிக்கு தினமும் பாதயாத்திரையாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். அவர்கள் கிரிவலம் வந்து பாதவிநாயகர் கோவில் முன்பு நின்று வழிபட்டு நேர்த்திக்கடனை நிறைவேற்றி செல்கின்றனர்.